March 24, 2018
மோடியின் ஆப்-ஸூம் சர்ச்சையில் சிக்கியது!
March 24, 2018நம் இந்தியர்களில் பெரும்பாலானோர் புழங்கும் பேஸ்புக்கில் இருந்து தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேம்பிரிட்...
நம் இந்தியர்களில் பெரும்பாலானோர் புழங்கும் பேஸ்புக்கில் இருந்து தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபேஸ்புக்கில் அந் நிறுவனம் தகவல்களை எடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உரியவர்களின் அனுமதி பெறப்பட்டுதான் அவர்களைப் பற்றிய விவரங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்று அனாலிட்டிக்கா நிறுவனம் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் நமோ செயலி, பயனாளர்களின் தகவல்களை அவர்கள் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் பகிர்ந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக நமோ என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓ.எஸ். இயங்குதளங்களில் இயங்கும் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, பயனாளர்களின் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த கிளவர் டாப் (Clever Top) என்ற நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எலியாட் ஆண்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆண்டர்சன், “நமோ செயலியில் ஒவ்வொரு பயனாளரும், தங்கள் தகவல்களைக் கொடுத்து பதிவு செய்தவுடன், பயனாளர் பயன்படுத்தும் செல்போன் குறித்த தகவல்கள், புகைப்படம், பாலினம் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்ட ஓர் இணையதளத்துடன் பகிர்ந்து வருகிறது. இது அந்தப் பயனாளர்களின் அனுமதியின்றியே நடந்து வருகிறது. அந்த இணையதளம் கிளவர் டாப் என்ற அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமானது’’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 5 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் பிரசாரத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது இன்று வரை தொடரும் நிலையில் மோடியின் ஆப்-ஸூம் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.