கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி... மாதவனிடம் மாட்டுகிறாரா? - ‘விக்ரம் வேதா’ விமர்சனம்
July 27, 201716 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், 18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்’ மாதவன் இருவருக்குமா...
படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா... வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள் மாஸ்!
நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில் ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. அவர்மீதும் என்கவுண்டர் ஆயுதம் பாய்கிறதா என்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்!
இறுக்கமான முகத்துடன், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் மாதவன். அந்த ஆரம்பக் காட்சியின், நீளமான சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார். மனைவி ஷ்ரதா ஸ்ரீநாத்துடனான லவ் மொமண்ட்ஸில், சாக்லேட் பாயாக மாறி ரொமான்ஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் கதை முடிச்சை அவிழ்க்கும்போது குழம்புவதும், விடை கிடைத்ததும் துள்ளுவதுமாய் நடிப்பின் சீனியாரிடியை நிரூபிக்கிறார்.
ஷ்ரதா ஸ்ரீநாத் சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சந்திரா’வாக வளையவரும் வரலட்சுமியின் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம். வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். இடது கையில் சாப்பிட்டுக்கொண்டே ‘வேதான்னா யாரு?’ என்று விஜய் சேதுபதி கேட்க ‘அக்காங்’ எனும்போது க்யூட்! ‘சேட்டா’வாக வரும் ஹரீஷ் பேரடியும், விஜய் சேதுபதியின் தம்பியாக கதிரும் நல்ல கதாபாத்திரத் தேர்வு!
வழக்கமான திருடன் போலீஸ் கதையை, வித்தியாசமான கேப்ஸ்யூலில் கொடுத்திருக்கும் திரைக்கதையும், இயக்கமும் புஷ்கர் - காயத்ரிக்கு சபாஷ் போட வைக்கிறது. ஒவ்வொரு முறை மாட்டிக்கொள்கிற வேதாளமான விஜய் சேதுபதி, விக்கிரமாதித்தனான மாதவனிடம் கதை சொல்வதும், அதற்கு விடை சொல்லும்போதே வேறு பல விடைகள் மாதவனுக்குக் கிடைப்பதுமாய் சரவெடி கொளுத்துகிறது கதை. சீரியஸான காட்சிகளிலும் மெலிதான நகைச்சுவையை படம் நெடுகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தில் அடிக்கடி வரும் பின்னி மில் காட்சியில் ‘இந்த மில்லு வேலை செய்யறதுக்காக வெச்சிருக்காங்களா, இல்ல நம்மள மாதிரி ஆளுக சண்ட போடறதுக்காக வெச்சிருக்காங்களா?’ என்று விஜய் சேதுபதி கேட்பது ஒரு உதாரணம். அந்த ‘நல்லி எலும்பு பரோட்டா’ சாப்பிடும் வி.சேவின் டுட்டோரியல், படம் முடிந்ததும் பரோட்டா கடையைத் தேடவைக்கிறது.
மணிகண்டனின் வசனங்கள் தேவைக்கேற்ற நச். ‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’, ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?' என்று விஜய் சேதுபதிக்கான வசனங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாய் ஈர்க்கிறார்.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையையும், பின்னி மில்லையும் அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வருகிறது. படம் நெடுக வந்து, படம் முடிந்த பின்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது சாம் சி.எஸ்ஸின் ‘தனனனனன நா... தனனனனன நா’ பி.ஜி.எம். அனிருத் குரலில் ‘யாஞ்சி யாஞ்சி’யில் கொஞ்சும் மெலடியில் கவர்ந்து, ‘டசக்கு டசக்கு டும் டும்’மில் கலக்கல் நண்பனாய் ஆடவைக்கிறார்.
முதல்பாதியின் விஜய் சேதுபதி எண்ட்ரிக்குப் பிறகு படம் கொஞ்சம் நொண்டியடிக்கிறது. தாதாவான விஜய் சேதுபதிக்கே தலைமையாக இருக்கும் ‘சேட்டா’ ஹரிஷ் பேரடி என்ன ஆகிறார்? அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமைதான்.. ஆனால் அத்தனை இண்டலிஜெண்ட் மாதவன், எல்லாவற்றையும் அந்தக் காட்சியில்தானா யோசிப்பார்? அதற்குமுன் கொஞ்சமும் சந்தேகம் வந்திருக்காதா?
இப்படிச் சில கேள்விகள் இருந்தாலும், தெளிவான திரைக்கதையும், விஜய் சேதுபதியின் க்ளாஸ் நடிப்பும் விக்ரம் வேதாவுக்கு பெரிய ப்ளஸ்ஸாகக் கைகொடுக்கின்றன.
கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம்
July 27, 2017இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’ என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அ...
மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட்ஸூம், சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ஜெயித்தாரா இல்லையா... என்பதே 'மீசைய முறுக்கு' சொல்லும் கதை.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என ஹிப் ஹாப் ஆதி பங்களித்திருக்கும் அனைத்து ஏரியாவும் சொல்வது ஒன்றுதான், 'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!'
அடித்தவர்களைத் திருப்பி அடிக்க தம்பியைக் கூட்டி வருவது, நாயகியைக் கவர எடுக்கும் முயற்சிகள், டான்ஸ், பாட்டு... என ஹீரோ ஆதி கவர்கிறார். ஆதியின் தந்தையாக நடித்திருக்கும் விவேக், வழக்கமான காமெடி ஏரியாவில் மட்டுமே ஸ்கோர் செய்யாமல், வசனம், சென்டிமென்ட் காட்சிகளிலும் லைக்ஸ் அள்ளுகிறார். நாயகி ஆத்மிகா வழக்கான தமிழ்சினிமா ஹீரோயினாகவே வந்துசெல்கிறார்.
'நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்' என ஆதி பேசும் வசனம், 'கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்' என விவேக் பேசும் வசனம்... இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி. கூல் ப்ரோ!
நடிகர், பாடகர், இசையமைப்பாளராக ஜெயித்திருக்கும் ஆதி, இயக்குநராகக் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். திடீர் திருப்பங்கள், எதிர்பாராத ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. அதில் காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட், காமெடி... எனக் காட்சிகள் தாறுமாறாய்ப் பயணிப்பது பெரிய மைனஸ்.
சின்ன வயசுல இருந்தே ஆதி காதலிப்பதெல்லாம் ஓகே. அதற்காக சிறுவயது காதலை முதிர்ச்சியான காதலாக காட்டியிருப்பது மைனஸ். சொல்லப்போனால் படத்தில் கதை என சொல்லும்படி எதுவும் இல்லாமல், கொஞ்சம் சோர்வுக்குள்ளாக்குகிறது.
எதார்த்தமாக நகரும் திரைக்கதையில், ஹிப் ஹாப் ஆதி மேடையில் பாடும்போது ஆடியன்ஸ் அழுவதெல்லாம் ஓவர் டோஸ். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு, இன்டிபென்டண்ட்டாக இணையத்தில் வெளியிட்ட ஆல்பத்தை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஆதி. படத்தோடு கனெக்ட் செய்திருந்தாலும், எல்லாப் பாடலும் ஒரே மாதிரி ஃபீல்தான். வெரைட்டியாக பாடல்கள் ஏதும் கொடுத்திருக்கலாமே ஆதி?.
காமெடி சண்டைகளுக்கு ஸ்கோர் கொடுப்பது, பிரியாணி எபிசோட் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கின்றன. ஆத்மிகா ஆதியைக் காதலிப்பது வீட்டில் தெரிந்து பிரச்னை ஆக, கல்லூரிக்குச் சென்றாலும் கூடவே சுற்றுகிறார், ஆத்மிகாவின் அக்கா. அவரை மீறி, ஆதியும் - ஆத்மிகாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் செம! சீனியர் சுதாகர் கேரக்டர் அருமை. ஆதியும் அவர் நண்பர்களும் சுதாகர் பெயரைச் சொல்லி கேண்டீனில் எக்ஸ்ட்ரா ஒரு வடையும், சில பல மரியாதைகளையும் பெற்றுக்கொள்ளும் சீன்களும் காமெடி சரவெடி!
படத்தில் விவேக்கும், ஆதியும் மட்டுமே நமக்குத் தெரிந்த பரிச்சயமான முகம். இவர்களைத் தவிர்த்து அடிக்கடி இணையத்தில் கலக்கும் நடிகர்களை படத்தில் நடிக்கவைத்திருப்பது இன்னும் சிறப்பு. யுடியூப் ஸ்டார்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என அடிக்கடி மொபைலில் பார்த்து சிரித்த இவர்களை வெள்ளித் திரையிலும் ரசிக்கலாம். இணையத்தில் மட்டுமே தலைகாட்டிய இவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புதுவாசல் திறந்துவிட்டதற்கு ஆதிக்கு பாராட்டுகள்.
படம் முழுவதும் மியூசிக்கல் ஃபீல் கொடுத்திருக்கிறார் ஆதி. சின்னச் சின்ன இடங்களில் மார்டன் மியூசிக்கில் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கும் செந்தில்குமார் மற்றும் கிருதி வாசன், படத்தொகுப்பு செய்திருக்கும் ஃபென்னி ஆலிவர் மூவரும் ‘உள்ளேன் ஐயா’ லெவலில் தங்கள் இருப்பை பதிவுசெய்கிறார்கள்.
இலக்கை விரட்டிப் பிடித்து 'வாடி புள்ள வாடி...' பாடலைப் பாடும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரில் உதாசீனமும், அவமானமும் கலந்திருப்பது படம் பார்க்கும் நமக்கும் ஃபீல் ஆகிறது. வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கியது, அவமானப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது... என தனக்கு நடந்த அனைத்தையும் பதிவு செய்யும் ஆதி, தன் பின்புலத்தை வைத்து கண்ணீர் வரவைக்காமல், 'ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ... முயற்சியைக் கைவிட்டுடாதீங்க!' என ஒருவரி அட்வைஸில் எனர்ஜி ஏற்றுகிறார். இந்த எனர்ஜிக்காகவே 'மீசைய முறுக்கி' ஒரு முறை பார்க்கலாம்!
எல்லாம் ஓகே, ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு டிரெய்லர் பார்த்த உணர்வே எழுவதால், ஒருவேளை 'மீசைய முறுக்கு 2'வில் மொத்தக் கதையும் சொல்ல இருக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.
''இந்தியாவில் போர் மூண்டால் 10 நாளில் வெடிமருந்து தீர்ந்து விடும்!'' - சி ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை
July 27, 2017அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் ச...
ஆனால், இந்த வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் இருந்து வெடிமருந்துகள் வாங்கத் திட்டமிட்டும் பயனில்லை. ஆவடியில் உள்ள, கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறது சி.ஐ.ஜி அறிக்கை. டி 72 பி.எல்.டி என்ற 20 மீட்டர் ஏணி பாலத்துடன் கூடிய கனரக வாகனத்தை உற்பத்தி செய்து ராணுவத்துக்கு அளிக்க ஆர்டர் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.. 2012-17 ஆண்டுக்குள் இந்த வாகனங்கள் சப்ளை செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே வருவதால், டி 72 பி.எல்.டி வாகனங்கள் சப்ளை செய்யப்படவில்லை. இதே நிறுவனம் தயாரித்த டி90 டாங்குகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடியேட்டர்கள் தரமானதாக இல்லை என்பதால் ராணுவம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது என்றும் சி.ஐ.ஜி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போபர்ஸ் பீரங்கியை மாதிரியாகக் கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தனுஷ் பீரங்கியில் சீன நாட்டின் மலிவு விலை பேரிங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, ‘துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலை’ இந்த ரக பீரங்கிகளைத் தயாரிக்கிறது. இதற்கான உதிரி பாகங்களை டெல்லியைச் சேர்ந்த சித் சேல்ஸ் இன்டிகேட் என்கிற நிறுவனம் சப்ளை செய்திருக்கிறது. 2013-ம் ஆண்டு 35.38 லட்சத்துக்கும் 2014-ம் ஆண்டு 53.07 லட்சத்துக்கும் 6 பேரிங்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரு பேரிங்குகளை அந்த நிறுவனம் துப்பாக்கி கேரஜ் நிறுவனத்துக்கு அளித்திருக்கிறது. அதில், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல CRB Antriebstechnik, Germany நிறுவனத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த பேரிங்குகளை சீனாவில் லுயாங்கில் உள்ள 'சைனோ யுனைடெட் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மலிவு விலை என்பதற்காக இதை வாங்கி 'மேட் இன் ஜெர்மனி' என முத்திரைக் குத்தி சித் சேல்ஸ் நிறுவனம் விற்றிருக்கிறது. சித் சேல்ஸ் நிறுவனத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையே பரிவர்த்தனை குறித்து நடந்த இ- மெயில் விவரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.' இந்த பேரிங்குகள் சரியான முறையில் இயங்கவில்லை என்றால் இலவசமாகவே மாற்றித் தருகிறோம்' என சீன நிறுவனம் கூறியிருக்கிறது. வருங்கால விற்பனையைக் கருத்தில்கொண்டு, சீன நிறுவனம் இத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறது. இதற்கு ஜபல்பூர் தொழிற்சாலையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் உடந்தையாக இருந்திருக்கின்றனர். அந்த அதிகாரிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சித் சேல்ஸ் நிறுவனம், துப்பாக்கி கேரேஜ் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது, இந்த ரக பீரங்கிகளை இந்திய ராணுவம் அதிகம் பயன்படுத்தியது.
15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!
July 27, 20171.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்...
நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.
2.உப்பை தவிர்க்கவும்
தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.
3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்
இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.
4.கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்
உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.
5.தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.
6.நன்கு மூச்சு விடவும்
தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
7.பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.
8.தண்ணீர் அதிகம் குடிக்கவும்
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.
9.நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10.நடக்கவும்
எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.
11.சைக்கிள் ஓட்டவும்
சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.
12.நீர்ச்சத்துள்ள பழங்கள்
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.
13.மெதுவாக சாப்பிடவும்
எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.
14.நன்கு வாய்விட்டு சிரிக்கவும்
தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.
15.பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்
பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க... ஆனா, வீட்ல இருக்கிற ஓவியாவை!
July 27, 2017விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த ...
பொதுமக்கள் ஓவியாவை விரும்புவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். பிக்பாஸில் சக போட்டியாளர்களால் தொடர்ந்து சீண்டப்படும் நபராக ஓவியா இருந்து வருகிறார். அவரைக் கோபமூட்டவும் அவர் சொல்லாததைச் சொன்னதாகவும் கூறப்பட்டுப் பிரச்னையாக்குவதும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஓர் அணியாக இவரைத் தனிமைப்படுத்துகின்றனர். அந்தச் சூழலுல் ஓவியா, தன் மீது சுய இரக்கம் கோராது துணிவோடு அதை எதிர்கொள்கிறார். தன் கருத்துகளைத் தயக்கமின்றி கூறுகிறார். கூடுமானவரை அழுவதைத் தவிர்க்கிறார். விரக்தியான முகப்பாவத்தை ஒரு போதும் வெளிப்படுத்துவதில்லை என்பதாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஓவியாவின் இந்தப் பண்புகளை ரசித்து அவருக்காக வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாக்களைப் (அதாவது ஓவியாவின் பண்புகளைக் கொண்டவர்களை) புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
பிக்பாஸ் ஓவியா தன் மனதில்பட்டதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதைச் சிலாகிப்பவர்கள், தங்கள் வீட்டில் உள்ள ஓவியாவை அதுபோலப் பேச அனுமதித்திருக்கிறார்களா? அப்படி அனுமதித்திருந்தால் பெண்கள் தாங்கள் விரும்பும் படிப்புத் தொடங்கிக் காதல் வரை முதலில் பெற்றோரிடம்தானே கூறியிருப்பார்கள். அதுபோன்ற ஜனநாயகம் நம் வீடுகளில் இருக்கிறதா என்ன? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் படித்த படிப்பைப் பயன்படுத்தாமல் சான்றிதழ்களில் முடக்குவதும், ஆணவக் கொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பே இல்லை அல்லவா!
மழையை மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்க, ஓவியா மட்டுமே மழையில் நனைந்து, ஆடி மகிழ்கிறார். தான் நினைப்பதைச் செய்கிறார். அதைப் பாராட்டும் எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தைகள், பெண்களின் மழையில் நனையும் ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் இருந்திருக்கிறார்கள். மழையில் நனைவது மட்டுமல்ல பெண்களின் சின்னச் சின்ன ஆசைகள் அவர்கள் இறக்கும் வரை நிறைவேறாமலே போய்விடுகிறது.
ஓவியா சகப் போட்டியாளர்களிடம் தன் நிலையை எடுத்துக்கூறும்போதெல்லாம் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் மடைமாற்றிவிடுகிறார்கள். ஓவியாவைக் கோபமேற்றவும் செய்கிறார்கள். அதைப் பார்க்கும் நீங்கள் ஓவியாவைத் தவிர்த்தவர்கள் மேல் கோபமுறுகிறீர்கள். இந்தக் கோபம் ஓவியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலிருந்தே வருகிறது. இதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாவை முழுமையாக தம் கருத்துகளைக் கூற அனுமதித்திருக்கிறீர்களா? இடைமறிக்காமல் பேச்சைக் கேட்டு, அதன்பின் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? அவர் கூறுவதிலிருக்கும் நியாயங்களை அவரின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? அநேகமாக ஒரு பகுதியினர் ஆம் என்றும் ஒரு பகுதியினர் இல்லையென்றும் கூறுவர். ஆனால், பெரும்பகுதியினர் மழுப்பலான பதிலைத்தான் சொல்வார்கள்.
பிக் பாஸ் ஓவியா, நிகழ்ச்சியின் நெறியாளர் நடிகர் கமல்ஹாசனிடம் பேசும்போது, அந்த வீட்டில் தனக்கு எதிராக நடப்பவற்றைத் தெளிவாகச் சொல்லவில்லை என்ற ஆதங்கம் பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டை விடுவிக்கும் வீடியோ ஒளிப்பரப்பானதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் அரங்கை அதிரச் செய்தது. இதே போன்று தன்னை வெளிப்படுத்தும் முறையில் சொற்களை லாவகமாகக் கையாளத் தெரியாத 'வீட்டு' ஓவியாக்களை இனம் கண்டுள்ளீர்களா? தன் மனதிலிருக்கும் விஷயங்களைக் கேட்பவருக்குச் சரியாகச் சென்றடையும் சொற்களால் விளக்க முடியாமல், அதனால் கோபம் அல்லது இயலாமையால் சூழப்படுவர். அதனால் அழுகையோடு தன் பிரச்னையை இன்னும் பெரிதாக்கிக் கொள்வர். பிக் பாஸ் ஓவியாவிடம் காட்டும் பரிவை இவரிடமும் காட்டும்போது வீட்டு ஓவியாவின் பிரச்னை எளிதாகத் தீர்ந்துவிடும் அல்லவா!
பிக் பாஸ் ஓவியா தனக்கு எதிராக நடந்துகொள்ளும் எவரையும் அவர் கேட்கும் 'ஸாரி' எனும் ஒரு சொல்லால் மன்னித்து, நட்பு பாராட்டுகிறார். அதேபோல, தான் செய்யும் தவறை உணர்ந்த கணத்தில் மன்னிப்பும் கேட்டு விடுகிறார். உங்கள் வீட்டு ஓவியா கேட்கும் மன்னிப்புகளை ஏற்றுகொள்கிறீர்களா? அந்த வருத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்களா? அந்த மன்னிப்பு கேட்கும் சரியான தருணங்களை அவர்களுக்கு வழங்குகிறீர்களா... ஏனெனில் பல வீடுகளில் சிறிய பிரச்னைகள் நடந்தாலும் வீட்டை விட்டு வெகுநேரம் வெளியே சென்றுவிடுவதைப் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் திரும்பி வரும் நேரம் வரை அந்த மன்னிப்பைச் சுமந்துகொண்டு வீட்டு ஓவியா காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு மிகக் கொடுமையானதல்லவா?
ஓவியாவிடம் பலர் ரசிப்பதன் அடிப்படை என்பது அவர் அவராக இருக்கிறார். அதாவது, சமூகத்தில் ஆண்களால், ஆண் மனநிலையைப் பெண்ணின் மனநிலையாக மாற்றிக் கட்டமைப்பட்டிருப்பதைப் போல இல்லாமல், பெண் மனநிலையில் அதை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருக்கிறார் என்று பார்வையாளர்களால் உணரப்படுகிறது. திரையில் அழும் குழந்தையை விட, நிஜத்தில் நம் வீட்டில் அழும் குழந்தையின்மீது அதிகப் பரிவு ஏற்படும். உடனே அந்தக் குழந்தை அழும் காரணத்தைச் சரி செய்வோம். அதேபோல நம் வீட்டு ஓவியாக்களையும் புரிந்துகொள்ள முயல்வோம்.
அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கும் அர்ஜுனின் நிபுணன்
July 27, 2017ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சு...
நிபுணன் என்பது கதாநாயகன் அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன்.
நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. படத்தை பார்த்த சில பிரபலங்கள் கதையில் நிறைய சிறந்த விஷயங்களை கூறி வருகின்றனர்.
இந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜுலி வெளியேற்றப்பட்டாரா? என்ன காரணம்
July 27, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேச்சு. அந்த வகையில் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு உருவாகி ...
இந்நிலையில் இன்று வரவிருக்கும் எபிசோட் ப்ரோமோவில் பிக்பாஸ் ‘இந்த வீட்டில் இருக்க தகுதியில்லை’ என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அனைவரும் ஒரு மனதாக ஜுலியை தேர்ந்தெடுத்து வெளியேற்றியுள்ளனர், ஜுலி வெளியேறினாரா? என்பதை இன்று பார்த்தால் தான் தெரியும்.
மேலும், ஜுலியை வெளியேற்ற காயத்ரியும் சம்மதித்துள்ளார், சமீபத்திய பிக்பாஸில் தொடர்ந்து காயத்ரியை நல்லவிதமாகவே காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் நான் அதை விஜய் சாரிடமே சொல்லவில்லை- அடுத்தப்படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
July 27, 2017இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தொடர்ந்து மூன்றாவது ...
இந்நிலையில் இவர் இதுக்குறித்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் தெரிவிக்கையில் ‘ஒரு ப்ரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று இருந்தேன்.
ஆனால், தற்போதே சொல்கிறேன், விஜய் சாருடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளேன், கத்தி படத்தை போல் இப்படமும் அழுத்தமான மெசெஜ் உள்ள படம்.
அந்த மெசெஜ் என்ன என்பதை இன்னும் விஜய் சாரிடம் கூட நான் சொல்லவில்லை’ என்று முருகதாஸ் கூறியுள்ளார்.
Blog Archive
-
▼
2017
(60)
-
▼
July
(60)
-
▼
Jul 27
(9)
- ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்ப...
- கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி.....
- கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய மு...
- ''இந்தியாவில் போர் மூண்டால் 10 நாளில் வெடிமருந்து ...
- 15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!
- பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க....
- அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கும் அர்ஜுனின் ...
- பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜுலி வெளியேற்றப்பட்டாரா? எ...
- இன்னும் நான் அதை விஜய் சாரிடமே சொல்லவில்லை- அடுத்த...
-
▼
Jul 27
(9)
-
▼
July
(60)