கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி... மாதவனிடம் மாட்டுகிறாரா? - ‘விக்ரம் வேதா’ விமர்சனம்

16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், ​18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்​’ மாதவன் இருவருக்குமா...

16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், ​18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்​’ மாதவன் இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்த​லே விக்ரம் வேதா.

படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே  ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா... வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள்  மாஸ்!

நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில்  ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. அவர்மீதும்  என்கவுண்டர் ஆயுதம் பாய்கிறதா என்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்!

இறுக்கமான முகத்துடன், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் மாதவன். அந்த ஆரம்பக் காட்சியின், நீளமான சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார். மனைவி ஷ்ரதா ஸ்ரீநாத்துடனான லவ் மொமண்ட்ஸில், சாக்லேட் பாயாக மாறி ரொமான்ஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் கதை முடிச்சை அவிழ்க்கும்போது  குழம்புவதும், விடை கிடைத்ததும் துள்ளுவதுமாய் நடிப்பின் சீனியாரிடியை நிரூபிக்கிறார்.

ஷ்ரதா  ஸ்ரீநாத் சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சந்திரா’வாக வளையவரும் வரலட்சுமியின் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம். வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். இடது கையில் சாப்பிட்டுக்கொண்டே ‘வேதான்னா யாரு?’ என்று விஜய் சேதுபதி கேட்க ‘அக்காங்’ எனும்போது க்யூட்! ‘சேட்டா’வாக வரும் ஹரீஷ் பேரடியும், விஜய் சேதுபதியின் தம்பியாக கதிரும் நல்ல கதாபாத்திரத் தேர்வு!

வழக்கமான ​திருடன் போலீஸ் கதையை​, வித்தியாசமான கேப்ஸ்யூலில் கொடுத்திருக்கும் திரைக்கதையும், இயக்கமும் புஷ்கர் - காயத்ரிக்கு சபாஷ் போட வைக்கிறது.  ஒவ்வொரு முறை மாட்டிக்கொள்கிற வேதாளமான விஜய் சேதுபதி, விக்கிரமாதித்தனான மாதவனிடம் கதை சொல்வதும், அதற்கு விடை சொல்லும்போதே வேறு பல விடைகள் மாதவனுக்குக் கிடைப்பதுமாய் சரவெடி கொளுத்துகிறது கதை. சீரியஸான காட்சிகளிலும் மெலிதான நகைச்சுவையை படம் நெடுகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தில் அடிக்கடி வரும் பின்னி மில் காட்சியில் ‘இந்த மில்லு வேலை செய்யறதுக்காக வெச்சிருக்காங்களா, இல்ல நம்மள மாதிரி ஆளுக சண்ட போடறதுக்காக வெச்சிருக்காங்களா?’ என்று விஜய் சேதுபதி கேட்பது ஒரு உதாரணம். அந்த ‘நல்லி எலும்பு பரோட்டா’ சாப்பிடும் வி.சேவின் டுட்டோரியல், படம் முடிந்ததும் பரோட்டா கடையைத் தேடவைக்கிறது.

மணிகண்டனின் வசனங்கள் தேவைக்கேற்ற நச். ‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’,  ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?' என்று விஜய் சேதுபதிக்கான வசனங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாய் ஈர்க்கிறார்.

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையையும், பின்னி மில்லையும்  அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வருகிறது. படம் நெடுக வந்து, படம் முடிந்த பின்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது  சாம் சி.எஸ்ஸின் ‘தனனனனன நா... தனனனனன நா’ பி.ஜி.எம். அனிருத் குரலில் ‘யாஞ்சி யாஞ்சி’யில் கொஞ்சும் மெலடியில் கவர்ந்து, ‘டசக்கு டசக்கு டும் டும்’மில் கலக்கல் நண்பனாய் ஆடவைக்கிறார்.

முதல்பாதியின் விஜய் சேதுபதி எண்ட்ரிக்குப் பிறகு படம் கொஞ்சம் நொண்டியடிக்கிறது. தாதாவான விஜய் சேதுபதிக்கே தலைமையாக இருக்கும் ‘சேட்டா’ ஹரிஷ் பேரடி என்ன ஆகிறார்? அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமைதான்.. ஆனால் அத்தனை இண்டலிஜெண்ட் மாதவன், எல்லாவற்றையும் அந்தக் காட்சியில்தானா யோசிப்பார்? அதற்குமுன் கொஞ்சமும் சந்தேகம் வந்திருக்காதா?

இப்படிச் சில கேள்விகள் இருந்தாலும், தெளிவான திரைக்கதையும், விஜய் சேதுபதியின் க்ளாஸ் நடிப்பும் விக்ரம் வேதாவுக்கு பெரிய ப்ளஸ்ஸாகக் கைகொடுக்கின்றன. 

மேலும் பல...

0 comments

Blog Archive