கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம்

இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’  என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அ...

இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’  என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா?

மிடி​ல்​ கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம்.  கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுட​ன்​ காதலும்​, காதலால்​ பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜா​லி மொமண்ட்ஸூம்​, சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என​ இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ​ஜெயித்தாரா இல்லையா... என்பதே 'மீசைய முறுக்கு' சொல்லும் கதை.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என ஹிப் ஹாப் ஆதி பங்களித்திருக்கும் அனைத்து ஏரியாவும் சொல்வது ஒன்றுதான், 'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!'

அடித்தவர்களைத் திருப்பி அடிக்க தம்பியைக் கூட்டி வருவது, நாயகியைக் கவர எடுக்கும் முயற்சிகள், டான்ஸ், பாட்டு... என ஹீரோ ஆதி கவர்கிறார். ஆதியின் தந்தையாக நடித்திருக்கும் விவேக், வழக்கமான காமெடி ஏரியாவில் மட்டுமே ஸ்கோர் செய்யாமல், வசனம், சென்டிமென்ட் காட்சிகளிலும் லைக்ஸ் அள்ளுகிறார். நாயகி ஆத்மிகா வழக்கான தமிழ்சினிமா ஹீரோயினாகவே வந்துசெல்கிறார்.

'நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்' என ஆதி பேசும் வசனம், 'கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்' என விவேக் பேசும் வசனம்... இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி.​ கூல் ப்ரோ! ​

நடிகர், பாடகர், இசையமைப்பாளராக ஜெயித்திருக்கும் ஆதி, இயக்குநராகக் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். திடீர் திருப்பங்கள், எதிர்பாராத ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. அதில் காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட், காமெடி... எனக் காட்சிகள் தாறுமாறாய்ப் பயணிப்பது பெரிய மைனஸ்.

சின்ன வயசுல இருந்தே ஆதி காதலிப்பதெல்லாம் ஓகே. அதற்காக சிறுவயது காதலை முதிர்ச்சியான காதலாக காட்டியிருப்பது மைனஸ்.​ சொல்லப்போனால்​ படத்தில் கதை என சொல்லும்படி எதுவும் ​ இல்லாமல், கொஞ்சம் சோர்வுக்குள்ளாக்குகிறது.

எதார்த்தமாக நகரும் திரைக்கதையில்​, ​ஹிப் ஹாப் ஆதி​ மேடையில்​ பாடும்போது ஆடியன்ஸ் அழுவ​தெல்லாம்​ ஓவர் டோஸ். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு, இன்டிபென்டண்ட்டாக இணையத்தில் வெளியிட்ட ஆல்பத்தை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஆதி. படத்தோடு கனெக்ட் செய்திருந்தாலும், எல்லாப் பாடலும் ஒரே மாதிரி ஃபீல்தான். வெரைட்டியாக பாடல்கள் ஏதும் கொடுத்திருக்கலாமே ஆதி​?.

காமெடி சண்டைகளுக்கு ஸ்கோர் கொடுப்பது, பிரியாணி எபிசோட் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கின்றன. ஆத்மிகா ஆதியைக் காதலிப்பது வீட்டில் தெரிந்து பிரச்னை ஆக, கல்லூரிக்குச் சென்றாலும் கூடவே சுற்றுகிறார், ஆத்மிகாவின் அக்கா. அவரை மீறி, ஆதியும் - ஆத்மிகாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் செம! சீனியர் சுதாகர் கேரக்டர் அருமை. ஆதியும் அவர் நண்பர்களும் சுதாகர் பெயரைச் சொல்லி கேண்டீனில் எக்ஸ்ட்ரா ஒரு வடையும், சில பல மரியாதைகளையும் பெற்றுக்கொள்ளும் சீன்களும் காமெடி சரவெடி!

படத்தில் விவேக்கும், ஆதியும் மட்டுமே நமக்குத் தெரிந்த பரி​ச்சயமான முகம். இவர்களைத் தவிர்த்து அடிக்கடி இணையத்தில் கலக்கும் நடிகர்களை படத்தில் நடிக்கவைத்திருப்பது இன்னும் சிறப்பு. யுடியூப் ஸ்டார்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என அடிக்கடி மொபைலில் பார்த்து சிரித்த இவர்களை வெள்ளித் திரையிலும் ரசிக்கலாம். இணையத்தில் மட்டுமே தலைகாட்டிய இவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புதுவாசல் திறந்துவிட்டதற்கு ஆதிக்கு பாராட்டுகள்.

படம் முழுவதும் மியூசிக்கல் ஃபீல் கொடுத்திருக்கிறார் ஆதி. சின்னச் சின்ன இடங்களில் மார்டன் மியூசிக்கில் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கும் செந்தில்குமார் மற்றும் கிருதி வாசன், படத்தொகுப்பு செய்திருக்கும் ஃபென்னி ஆலிவர் மூவரும் ‘உள்ளேன் ஐயா’ லெவலில் தங்கள் இருப்பை பதிவுசெய்கிறார்கள்.

இலக்கை விரட்டிப் பிடித்து 'வாடி புள்ள வாடி...' பாடலைப் பாடும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரில் உதாசீனமும், அவமானமும் கலந்திருப்பது படம் பார்க்கும் நமக்கும் ஃபீல் ஆகிறது. வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கியது, அவமானப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது... என தனக்கு நடந்த அனைத்தையும் பதிவு செய்யும் ஆதி, தன் பின்புலத்தை வைத்து கண்ணீர் வரவைக்காமல், 'ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ... முயற்சியைக் கைவிட்டுடாதீங்க!' என ஒருவரி அட்வைஸில் எனர்ஜி ஏற்றுகிறார். இந்த எனர்ஜிக்காகவே 'மீசைய முறுக்கி' ஒரு முறை பார்க்கலாம்!

எல்லாம் ஓகே, ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு டிரெய்லர் பார்த்த உணர்வே எழுவதால், ஒருவேளை 'மீசைய முறுக்கு 2'வில் மொத்தக் கதையும் சொல்ல இருக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive