சிசேரியன் அதிகரிப்பு – மத்திய அரசு அதிரடி!

நம் நாட்டில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது 15% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில்,...

நம் நாட்டில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது 15% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுக பிரசவம் என்ற நிலை மாறி, சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை வழியாக, குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 15% உயர்வு சிசேரியன் பிரசவத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய வயதில் திருமணம் செய்துகொள்ளாமல், 30 வயதிற்கு மேல் பெண்கள் திருமணம் செய்துகொள்வதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசேரியன் செய்துகொள்வதில், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களே முன்னிலையில் உள்ளன. திருமணத்தை 30 வயது வரை தள்ளிப்போடுவது அல்லது ஒருவேளை திருமணம் முடிந்தாலும், குழந்தை பெறுவதை 30 வயது வரை தள்ளிப்போடுவது போன்றவற்றால், பெண்களின் இடுப்பு எலும்பு வளர்ச்சியில் பெரும் பாதிப்பு நிகழ்கிறது. இதனால், சிசேரியன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உரிய காலத்தில் திருமணம் செய்வதே இதற்கான தீர்வாக இருக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் அங்கீகாரம் பெற தனியார் மருத்துவமனைகள் தாங்கள் நடத்திய சிசேரியன் பிரசவ எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி மத்திய அரசு சுகாதார திட்ட அதிகாரிகள், “மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் கீழ் மத்திய அரசின் சுகாதார திட்டம் செயல்படுகிறது. இதன் அங்கீகாரம் பெற சிசேரியன் பிரசவ எண்ணிக்கையை மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். புதிய செயல்பாட்டின் கீழ் ஒருமாதத்தில் இதை தெரிவிக்க வேண்டும். அரசு மற்றும் மருத்துவமனைகளின் புதிய உடன்பாடுபடி இதை தெரிவிக்காவிட்டால் அங்கீகாரத்தை கைவிடுவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள குறிப்பாணையின் கீழ் இந்த தகவலை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுள்ளோம். புதிய பட்டியல் செயல்முறை தொடங்கும்போது இது கட்டாயமாக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் சிசேரியன் பிரசவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று அரசு விரும்புகிறது. பிரசவத்துக்கு மருத்துவமனையை பெற்றோர் தேர்ந்தெடுக்க இது உதவும்”என்று கூறினர்.

அதாவது அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இது போன்ற சிசேரியன் பிரசவம் 10 முதல் 15 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்து உள்ளது. ஆனால் தெலுங்கானா நகரப்பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 74.8 சதவீதம் இருக்கிறது. தமிழகத்தில் 58 சதவீதமும் கேரளாவில் 41 சதவீதமும் இருக்கிறது என்று சென்னையை அடிப்படையாக கொண்ட பொது சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்து இருக்கிறது.

அமெரிக்காவில் இது போன்ற பிரசவங்கள் 20 சதவீதம், இங்கிலாந்தில் 24 சதவீதம், பின்லாந்தில் 16 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்கிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகாகாந்தி 2 மாதத்திற்கு முன் இதுபற்றி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுகப்பிரசவத்திற்கு பதிலாக இது போன்ற சிசேரியன் தேவையில்லாதது என்றும் மேனகா காந்தி குறிப்பிட்டு இருந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் மெயில் அனுப்பி இருந்தார்.

குறிப்பாக தீவிர சிக்கல் இல்லாத நிலையிலும் எனக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தார்கள். நான் சுகப்பிரவத்துக்கே ஆசைப்பட்டேன். நான் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் மத்திய அமைச்சர் மேனகாகாந்திக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அது மட்டுமின்றி சிசேரியன் அறுவை சிகிச்சை மிகுந்த ஆபத்தானது என்றும் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் குறைந்த அளவு தாய்ப்பால் சுரக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் 1000 தனியார் மருத்துவமனைகள் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வு மையங்கள் மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் பல...

0 comments

Blog Archive