திருடர்கள் ஜாக்கிரதை! அலர்ட் ஆகும் சினிமாவுலகம்!

முதலில் நம் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம்… தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது கேமரா வைத்தோ, மொபைல் போன் வைத்தோ அல்லது பேனா கேமரா ...

முதலில் நம் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம்… தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது கேமரா வைத்தோ, மொபைல் போன் வைத்தோ அல்லது பேனா கேமரா வைத்தோ படம் பிடித்தால் அதனை எந்தத் தியேட்டரில், எந்தத் தேதியில், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்க முடியுமா?

எதார்த்தத்தில் எல்லோருக்கும் எழும் சாதாரணமான, நியாயமான சந்தேகம் இது. கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் டிஜிட்டல் யுகத்தின் சாதகமான அம்சம்.

ஒரு சிறிய விளக்கம் நம் சந்தேகத்தைப் போக்கும் என நம்புகிறேன்.

தியேட்டர்களில் ‘ஈ சினிமா’, ‘டி சினிமா’ என்ற இரண்டு வகை உண்டு. புரிதலுக்காக ஈ சினிமாவை ஒன்கே என்றும் டி சினிமாவை டூகே, ஃபோர்கே என்றும் சொல்கிறோம்.

ஈ சினிமா என்பது எம்பெக்4 முறையில் வீடியோவாகவும், டி சினிமா என்பது ஜேபெக்2000 முறையில் தனித்தனி ஃபிரேமாகவும் மாஸ்டரிங் செய்து ஓட்டப்படுகிறது. மாஸ்டரிங் செய்த கையோடு இன்விசிபிள் வாட்டர்மார்க் என்கிரிப்சன் செய்யப்படுகிறது. இந்த என்கிரிப்சன் செய்யப்பட்ட கன்டென்ட் ஒவ்வொரு தியேட்டரிலும் பொருத்தப்பட்டுள்ள சர்வர் மூலமாகப் போகும்போது நம் சாதாரண கண்களுக்குத் தெரியாத வாட்டர் மார்க் அந்த சம்பந்தப்பட்ட திரையோடு சேர்த்து காட்டப்படுகிறது. எனவே, இந்த டிஜிட்டல் யுகத்தில் தப்பு செய்வது எவ்வளவு எளிதோ அதைவிட கண்டு பிடிப்பதும், அதனை ஆதார பூர்வமாக நிரூபிப்பதும் மிக எளிது.

தமிழ்நாட்டிலிருக்கும் 1070 தியேட்டர்களிலும் இந்த வகையான ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கோடு பொருத்தும் வகையில் சர்வர்கள் இருக்கின்றன. எனவே, நள்ளிரவு பிசாசு போல போர்வையைப் போர்த்திக் கொண்டு இரண்டாம் ஆட்டம் முடிந்தபின் ‘யாருக்குத் தெரியப் போகிறது’ என்ற அறியாமை தெனாவெட்டில் இரண்டு மணிக்குமேல் ஓடவிட்டு படம் பிடித்தாலும் ‘சிவொலுசன்’ முறையில் கண்டு பிடித்துவிட முடியும். ஓடவும் முடியாது, ஔியவும் முடியாது.

நிற்க!

எனது ‘மனுசனா நீ’ படத்தைத் திருடிய கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் மேல் கிரிமினல் வழக்கும், நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கும் போடப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒருவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

திரு. விஷால்! திருட்டுக்கு எதிராக அவருடைய கோபம், அதனைக் கட்டுப்படுத்த, ஒழிக்க வேண்டுமென்ற அவரது ஆர்வம், என் போன்றவர்களுக்கு உள்ளுக்குள் எழுந்த தடைகளையும் மீறி உதவி செய்து பைரஸியைக் கட்டுப்படுத்த எத்தனித்த அவரது செயல்பாடு… அவருக்கு என் பாராட்டுக்கள்!

‘ஒரு குப்பைக் கதை’ படத்தைத் திருடிய மயிலாடுதுறை கோமதி தியேட்டர் மீது கிரிமினல் வழக்கு நடக்கிறது. அந்தப் படத்தை இணையத்தில் இதுவரை முப்பது லட்சம் பேர் வரை பார்த்திருப்பதாகத் தகவல். வயிறெரிந்து கோபத்தோடு பொங்கிய அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம் குறைந்தபட்சம் எட்டு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடப்போவதாகக் கூறினார்.

அதே படத்தை திருட்டுத்தனமாக எடுத்த இன்னொரு தியேட்டரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

அடுத்து ‘கோலிசோடா டூ’ படத்தைத் திருடிய தியேட்டரும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பரத் சீனி முன்பு சம்பந்தப்பட்ட தியேட்டர் திருடன் வராமல் இருப்பது நல்லது. அத்தனை கோபம் அவருக்கு.

‘டிக்டிக்டிக்’ படம் வெளிவந்த வெள்ளிக்கிழமை இரவே தேவ…. மகன்கள் நடத்தும் திருட்டு இணையத் தளத்தில் வகைவகையாய் வந்துவிட்டது. அதன் தயாரிப்பாளர் ஜபக் உடல்நிலை சரியில்லாமல் படுத்து விட்டார்.

சினிமா என்பது ‘தயாரிப்பு, விநியோகம், தியேட்டர் ஔிபரப்பு’ என்ற கூட்டுக் குடும்பச் செயல்பாடு. சில கேடு கெட்ட தியேட்டர் திருடர்களால் ‘நம் கையை எடுத்து நம் கண்ணைக் குத்தியதுபோல்’ எல்லோருக்கும் இழப்பு வருகிறது. இத்தனை நடந்தும்

… நடிகர் சங்கம், சம்பந்தப்பட்ட நடிகர்கள்,
… இயக்குநர்கள் சங்கம்,
… ஃபெப்ஸி அமைப்பு,
… விநியோகஸ்தர்கள் சங்கம்,
… திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
… வேறு தயாரிப்பாளர்கள் சங்கங்கள்
என யாருமே பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளிப்படையாக பல மீட்டிங்கில் தியேட்டர் பைரஸி பற்றிப் பேசியிருக்கிறது. பின்புலத்தில் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. அது ஒன்றுதான் ஆறுதல்.

சரி, தியேட்டர் திருடர்களை எப்படிக் கண்டு பிடிப்பது? எப்படி தண்டனை வாங்கித் தருவது?

1. படம் வெளியானபின் கடையில் திருட்டு டிவிடியோ அல்லது நெட்டில் தேவ… மகன்களின் சைட்டில் படமோ இருந்தால் அதனை ஒரு பிரதி எடுத்து முதலில் ‘கியூப்’ கம்பெனிக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அல்லது படத்தை வாங்கிய உரிமையாளர் தன் லெட்டர் பேடில் ‘எங்கிருந்து எடுக்கப்பட்டது’ என்ற விபரம் கேட்டு லெட்டரும், டிவிடியும் கொடுக்க வேண்டும். இது இலவச சேவை அல்ல. அவர்கள் முதலில் ‘ஈ சினிமா’ வகையில் செக் பண்ணுவார்கள். அதிலேயே திருடன் பிடிபட்டால் ரூ. 29,500/- செலுத்த வேண்டும். திருடன் டி.சினிமா தியேட்டராக இருந்தால் ரூ. 59,000/- செலுத்த வேண்டும். கெடுத்தாலும் மேன் மக்கள் காஸ்ட்லியான மேன் மக்களே!

அதிகபட்சம் மூன்று நாட்களில் திருடன் பற்றிய விபரம் கொடுத்து விடுவார்கள். எந்தத் தியேட்டர் என்ற விபரம் அவர்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தவிர யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது… சமீபத்து சந்தேகத்தைத் தவிர!

2. அடுத்து எக்மோரில் பழைய கமிசனர் ஆபீஸில் இயங்கி வரும் IPREC – Intellectual Property Rights Enforcement Cell, தமிழில் ‘அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு’ துறையில் ‘எஸ்பி’ க்கு மனு எழுதி அதனோடு

…கியூப் அல்லது யூஎஃப்ஓ வில் கிடைத்த கடிதம்,
… டைட்டில் பதிந்த சங்கத்தின் நகல்
… சென்சார் சான்றிதழ் நகல்
… திருட்டு டிவிடி மூன்று பிரதிகள்

ஆகியவற்றை இணைத்து மனுச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 12 இடங்களில் இந்தத் துறை இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்குகிறது. இதனோடு விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. எஸ்பி ஆபீஸில் சம்பந்தப்பட்ட சரகத்துக்கு கையெழுத்திட்டு கொண்டுபோகச் சொல்வார்கள்.

3. சம்பந்தப்பட்ட சரக இன்ஸ்பெக்டருக்கு அதேபோல் ஒரு மனுவும், ஆதார இணைப்புகளும், கையிலிருக்கும் மூன்று டிவிடி க்களும் கொடுக்க வேண்டும். அங்கு எஃப்ஐஆர் எழுதி திருட்டுத் தியேட்டருக்குச் சென்று உரிமையாளர் அல்லது லீஸ் எடுத்தவர், மேனேஜர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரைக் கைது செய்து, மெசின்களை கழட்டி ஸீஸ் செய்து மறுநாள் கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். பல நேரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும். சில வேளை தயாரிப்பாளர் உறுதியாக இருந்தால் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் வரும்.

4. இந்த வழக்கு கிரிமினல் வழக்கு. இதன்மூலம் தண்டனை மட்டுமே பெற்றுத் தர முடியும். எனவே, படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து நஷ்ட ஈடு வாங்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அந்தத் தியேட்டர் மேல் சிவில் கேஸ் போட வேண்டும். குறைந்தது ஒரு கோடியிலிருந்து ஐம்பது கோடி வரை நஷ்ட ஈடு கேட்க வாய்ப்பு உண்டு.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம்: லோக்கல் கோர்ட்டில் கேஸ் போட்டால் 3.5% கோர்ட் ஃபீஸ் கட்ட வேண்டும் எனக் கேள்விப் பட்டேன். அதாவது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டால் மூன்றரை லட்ச ரூபாய் கோர்ட்டில் தயாரிப்பாளர் கட்ட வேண்டும். அதோடு வக்கீல் செலவு வேறு.

அதேவேளை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டால் ஒரு சதவீதம்தான் கோர்ட் ஃபீஸ்.

ஏற்கெனவே படத்தை ரிலீஸ் செய்து கோவணமும் கழண்டு கிடக்கும் தயாரிப்பாளர் இந்தச் செலவுகளெல்லாம் எப்படிச் செய்வது? இந்த நிலைதான் இதுவரை திருட்டுத் தியேட்டர்களுக்குச் சாதகமாக இருந்தது. இப்போது நிலை மாறியிருக்கிறது.

அடி வாங்கியவன் வெகுண்டு எழுந்தால் என்ன நடக்குமோ அது இப்போது நடக்கிறது.

இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய விசயம்: இந்தத் துறையின் எஸ்பி மேடம் சினிமா திருட்டை ஒழிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆம்னி பஸ்ஸில் படம் போட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்.

இந்தத் துறையின் டிஎஸ்பி திரு. நீதிராஜன். உண்மையிலேயே நீதி ராஜன்தான். எந்த நிலையிலும் லஞ்சமில்லாத நேர்மையான ஆட்களைக் கொண்ட துறையின் இந்த டிஎஸ்பி வட நாட்டுக் கொள்ளையர்களைப் பிடித்த நிஜ ‘தீரன்’களில் ஒருவர். லோக்கல் டீவி சேனல்களில் உரிமை வாங்காமல் படங்களை ஔிபரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறார். இது தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய ஆறுதல்.

தமிழ்நாட்டில் இயங்கும் அதிகபட்ச தியேட்டர்கள் திருட்டு விசயத்தில் நியாயமாகவே நடந்துகொள்கின்றன. ஒரு சில எச்சைப் பொறுக்கிகளால் வாழ்க்கையை இழந்த தயாரிப்பாளர்கள் அநேகம் பேர்.

இண்டர்நெட் திருடன் வெளிநாட்டில் திருடுகிறான் என்று சொன்னதெல்லாம் உண்மையில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கும் இந்த வேளை அனைவரும் கை கோர்த்து திருட்டுக்கு எதிராகப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்! இல்லையென்றால்…

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
நிலைமைதான்!

மேலும் பல...

0 comments

Blog Archive