மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்!

சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவ...

சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள்.

சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா இன்று (10 7 17) சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி திரு சாய் பிரகாஷ் லியோமுத்து, இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர்  டி ஆர் பி ராஜா மற்றும் சாய் ராம் கல்வி குழுமத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் சாய்பிரகாஷ் லியோ முத்து வரவேற்றார். தன்னுடைய வரவேற்புரையில் சாய் ராம் கல்வி குழுமத்தினை நிறுசிய நிறுவனத் தலைவர் லியோமுத்து நோக்கத்தையும், கல்வி கற்பதற்காக அளித்து வந்த உதவிகளையும், அவரது நினைவலைகளையும் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார். லியோ முத்து தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, தரமான கல்வி வழங்குவதன் மூலம் அவர்களை உயரிய நிலையை அடைய வைத்து அதன் மூலம் மகிழ்ச்சி கண்டார். மேலும் லியோ முத்து எண்ணங்களை சாய்ராம் கல்வி குழுமம் நிறைவேற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை மற்றும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை நாற்பது மாணவ மாணவிகளுக்கு, இசைஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜயசேதுபதியும் வழங்கினார்கள்.

பின்னர் இசைஞானி வாழ்த்துரை வழங்கி பேசும் போது,‘மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும். கனவு காண்பதற்கு செலவிடும் நேரம் வீண், அந்த நேரத்தை உங்களுடைய லட்சியத்திற்காக அயராது உழைத்தால் வெற்றி கிடைக்கும். நான் இசையமைப்பாளராக வேண்டும் என நான் எண்ணியதைப் போல, பல முயற்சிகள் செய்து இசையமைப்பாளர் ஆனேன். அதே போல தாங்கள் வைத்துள்ள திட்டத்தை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் உங்கள் லட்சியத்தை அடைய முடியும்’என்றார்.

பின்னர் பேசிய  சுப வீரபாண்டியன்,‘மாணவர்களுக்கு சமுதாய பொறுப்புணர்வு இருக்கவேண்டும். சமூக முன்னேற்றத்திற்காக தங்கள் கற்ற கல்வியை பயன்படுத்தவேண்டும். இதன் மூலமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல இயலும்.இன்றைய சூழலில் மாணவர்களுக்கு சுய சிந்தனை, திறந்த மனம், தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் தான் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும். அப்போது தான் சாதனையாளராக முடியும். அத்துடன் கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள் தான் திரு லியோமுத்து, இளையராஜா விஜய் சேதுபதி போன்றவர்கள்’ என்றார்.

பின்னர் வாழ்த்துரை வழங்கி விஜய் சேதுபதி பேசும் போது, ‘ நான் நீண்ட நேரம் பேசமாட்டேன். கொஞ்ச நேரமே பேசப்போகிறேன். இங்கு படித்து தேர்ச்சியடைவது பெரிய கடினமான விசயமல்ல, இங்கு படித்து முடித்தவுடன் பல கோரமுகங்களைக் கொண்ட பொது சமுதாயத்திற்கு வரும் போது நீங்கள் எதிர்பார்க்காத பல விசயங்கள் இருக்கும். இங்கு நன்றாக படித்தால்தான் சமுதாயத்தில் உள்ள சில மிருகங்களை எப்படி எதிர்கொள்வது என்ற, சமூக பாடத்தில் வெற்றி பெற முடியும். வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்றுத்தரும். அதனை எளிதாக எடுத்துக் கொண்டும், யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டும் செயல்படவேண்டும். நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும்’ என்றார். விழாவின் இறுதியில் சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

மேலும் பல...

0 comments

Blog Archive