நகம் பெயர்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

விரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. ...

விரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது அதில் அடிபடும். இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்...

நகம் பெயர்தல்

நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களிருந்தாலும், அடிபடுவதுதான் மிக முக்கியக் காரணம். இது மட்டுமில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு. இதற்கு பூஞ்சைத்தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னைகளும் காரணமாகின்றன.

அடிபடுதல்!

சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும்போது அடிபடுவதாலும்கூட நகம் பெயர்ந்துவிடலாம். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப்போய்விடும். சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்திருந்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகளைச் செய்து சரிசெய்துவிடலாம்.

நகத்தில் அடிபட்டால் செய்யவேண்டியவை என்னென்ன?

* அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும்.

* அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளவும்.

* நகத்தில் கட்டுப்போட்டு ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும். 

* விரலிலிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டிவிடவும்.

* நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

* அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நகம்

(Fungal Infection)

நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்துகொள்ளும். அதை குணப்படுத்துவதும் கடினம். முதியவர்கள், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பூஞ்சைத்தொற்றுக் காரணமாக நகம் பெயர்வதற்கான சில அறிகுறிகள்...

* நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும்.

* நகத்தின் நுனிப்பகுதி வீக்கமடையும்.

* சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு. 

* நகம் மிக எளிதாக உடையும் தன்மையிலிருக்கும். 

இதை குணப்படுத்த பூஞ்சைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி வரலாம்.

பூஞ்சைத்தொற்றிலிருந்து தப்பிக்க சில வழிகள்...

* நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.

* வளரும் நகங்களை முறையாக அவ்வப்போது வெட்டி விடவும்.

* கால்களை ஈரமில்லாமல் அவ்வப்போது உலர்வாக வைத்துக்கொள்ளவும்.

* கை, கால் நகத்தில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

சொரியாசிஸ்

சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய்தடுப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங்களையும் பாதிக்கலாம். இந்த நோயில் நகத்துக்கு அடியிலிருக்கும் தோல் செல்கள் இறந்துபோவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்துவிடும். சொரியாசிஸுக்கு சிகிச்சை செய்துகொள்வதோடு, நகங்களை அவ்வப்போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும்.

நகத்தை நீக்குவது

நகத்தை எப்போது நீக்குவது?

நகம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதை முழுமையாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அது வளரும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக்கொண்டுவரும் நகத்தின் முனைப்பகுதியை மென்மையாக்கிவிட வேண்டும். மேலும் அதோடு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் அங்கே நோய்தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்துவிடும்.

நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்...

* சீழ் வருதல்

* காய்ச்சல்

* அதிகமாக வலித்தல்

* வீக்கம், சிவந்துபோதல்.

நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது.

மேலும் பல...

0 comments

Blog Archive