அனுபவம்
நிகழ்வுகள்
அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு – அவர் ஆஸ்பத்திரியிலேயே அட்மிட்!
March 23, 2018
அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த இளைஞன், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கப் போவதாக 33 வருடத்துக்கு முன்பு கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் 150 படுக்கையுடன் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று 12 நாடுகளில் 69 மருத்துவமனைகளையும் 9,500 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்யமாக வளர்ந்து உள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அப்போலோ அளித்து வருகிறது. 60 ஆயிரம் செவிலியர்கள் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என தற்போதைய வளர்ச்சி எல்லாமே ‘மெடிக்கல் மிராக்கிள்’ பிரம்மாண்டம் தான். வருடத்திற்கு 3லட்சத்து 70 ஆயிரம் உள்நோயாளிகளும் 33 லட்சம் வெளிநோயாளிகளும் அப்போலோ வந்து செல்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 5,900 மூட்டு ,இடுப்பு அறுவை சிகிச்சைகளும், 14 ஆயிரம் நரம்பு அறுவை சிகிச்சையும், 400 கல்லீரல் மாற்றும், 1,100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 100 கோடி அதிகம். நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது அப்போலோ.
1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ பிரபலம் ஆனதே 1984-ல்தான். அப்போதுதான் எம் .ஜி .ஆர். சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த 10 நாட்களும் அப்போலோ ஏரியாவை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். எம் .ஜி .ஆர் உடல் நிலை குறித்த அறிக்கைகளை அப்போது உடனுக்குடன் வெளியிட்டது அப்போலோ. அதன் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு உடல்நல குறைவால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முரசொலி மாறனை பார்க்க, திமுக தலைவர் கருணாநிதி தினமும் அப்போலோ வந்தார். அப்போதும் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது அப்போலோ. சென்ற 2011-ம் ஆண்டு தொடர் பிரசாரத்தால் கருணாநிதியும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் உதடு சிகிச்சைக்காக அப்போலோ வந்துள்ளார். இப்படி அரசியல், சினிமா நட்சத்திரங்களின் மருத்துவமனையாகத் திகழ்கிறது அப்போலோ.
இந்தியாவின் அத்தனை மெட்ரோ நகரங்களிலும் அப்போலோ மருத்துவமனை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதுரை,கோவை, காரைக்குடி என இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.33 வருடத்திற்கு முன்பு ரெட்டி சொன்னது போல், அப்போலோ இப்போது பணக்காரர்களின் மருத்துவமனை தான். நட்சத்திர ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் அறை வாடகையை விட அப்போலோ ரூம் வாடகை அதிகம். மேற்கு உலக நாடுகளில், மருத்துவமனைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் இயக்குகின்றன. இந்தியாவில் அப்படி ஒரு கார்ப்ரேட் மருத்துவமனை இருக்குமானால் அது அப்போலோ மட்டுமே. இங்கு நோயாளிகளுக்கான கட்டணங்கள் எல்லாமே பேக்கேஜ் முறையில் தான் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நோய்க்கே லட்சங்கள் இல்லாமல் நீங்கள் அப்போலோவிற்குள் நுழைய முடியாது. 3,500 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரை அப்போலோவில் அறைகள் உள்ளன என்பது கூடுதல் தகவல். அப்பேர் பட்ட அப்போலோ சாம்ராஜ்யத்தின் அதிபர் தான் உருவாக்கிய ஆஸ்பத்திரியில் ஒரு பேஷண்டாக அனுமதிக்கப்பட்டுள்ள்ளார் என்பதுதான் சோகம்.
0 comments