ரஜினியின் புதிய பாபா! ஆன்மிக அரசியல் எப்படி இருக்குமோ.../

விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு மார்ச் 10-ல் இமயமலை நோக்கிப் புறப்பட்டார் ரஜி...

விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு மார்ச் 10-ல் இமயமலை நோக்கிப் புறப்பட்டார் ரஜினிகாந்த். ‘அரசியலில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கத்தான் இமயமலையில் முகாமிட்டிருக்கிறார்’ , ‘பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று றெக்கை கட்டிப் பறந்தன யூகங்கள். உண்மையில் இமயமலையில் என்னதான் செய்தார் ரஜினி? யாரோடு பேசிக்கொண்டிருந்தார்? இந்தப் பயணம் முழுக்க ரஜினியின் விரல்பிடித்துக் கூடவே பயணிந்த அந்தச் சுவாமிஜி யார் என்பதிலிருந்து தொடங்கியது நம் தேடல்.

அந்தச் சுவாமிஜியின் பெயர் அமர் பாபாஜி. இந்தப் புதிய பாபாவை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நல்லி குப்புசாமி செட்டியார். ``ரஜினி தனது குருநாதராக ஏற்றுக்கொண்ட பாபாஜியின் நேரடி சிஷ்யர்தான் இந்த அமர் பாபாஜி. ஒருமுறை நான் பாலம்பூர் சென்றபோது அவரைச் சந்தித்தேன். ரஜினிகாந்த் பற்றியும் அவரின் ஆன்மிக ஆர்வம் குறித்தும் பேசப்பேச அமர் பாபாஜி முகத்தில் ஆச்சர்ய ரேகைகள். ‘ஆடம்பரமான சினிமா உலகத்துல ஆன்மிக நாட்டமுள்ள ஓர் எளியவரா? உடனே அவரைப் பார்த்தே ஆகணும்’ என்று சொன்னார்.  அடுத்த முறை ரஜினியைச் சந்தித்தபோது அமர் பாபாஜி சொன்னதைக் கூறினேன். அந்தச் சமயத்தில்தான் ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்தார். அமர்பாபாஜி சென்னை வரவிருப்பதாகவும் வரும்போது ரஜினியைச் சந்திக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்தேன்.

யார் வீட்டுக்கு வந்தாலும் வாசல்வரை வந்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச்செல்வது ரஜினியின் பண்பு. ஆனால், சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு ரஜினியின் உடல்நிலை பலவீனமாக இருந்ததால் அமர்பாபாஜியை லதா மேடம் வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ரஜினி படுத்திருந்த கட்டில் அருகில் சென்ற அமர் பாபாஜி அவருக்காக மனமுருகித் தியானம் செய்தார். உச்சந்தலை முதல், உள்ளங்கால்வரை கைகளால் தடவி ஆசிர்வாதம் செய்தார். இருவரும் நிறைய நேரம் பேசினர். ‘நீங்கள் பாபாஜிமேல் இவ்வளவு பக்தியாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அடுத்தமுறை ஷின்கோரி வாருங்கள். அங்கே பாபாஜி வாழ்ந்த பிரசித்தி பெற்ற இடங்கள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றிக்காட்டுகிறேன்’ என்று அமர் பாபாஜி சொன்னார்.

முதலில் சோர்வாகக் காணப்பட்ட ரஜினி, அமர் பாபாஜி பேசப்பேசப் புதுத்தெம்பு பெற்றதுபோலக் காணப்பட்டார். அமர் பாபாஜி புறப்பட்டபோது, மெல்ல எழுந்து வாசல்வரை வந்து ரஜினி வழியனுப்பினார். எல்லோருக்குமே ஆச்சர்யம்!

அதன்பிறகு இமாசலப் பிரதேசத்தில் உள்ள பாலம்பூரில் ஹோலி பண்டிகை, குரு பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ரஜினியை அமர்ஜி அழைத்தார்.  ‘காலா’ ஷூட்டிங் வேலைகளால் ரஜினியால் அப்போது போகமுடியவில்லை. அதனால் இந்தமுறை அமர்பாபாஜி ஆசிமரத்துக்குத்தான் முதலில் சென்றார். ஷின்கோரியில் பிரசித்தி பெற்ற குகைக்கோயிலுக்கு  ரஜினியை அழைத்துச்சென்று பூஜை நடத்தினார் அமர்பாபாஜி.

பாலம்பூரிலிருந்து 5 கி.மீ அருகில் தாரஹர் அரண்மனை இருக்கிறது. அங்கே தங்குவதற்காக ரஜினியை வற்புறுத்தி அழைத்தனர்.  அதை மறுத்துவிட்டு அதிக வசதிகள் இல்லாத, குக்கிராமத்திலிருக்கும் ஆசிரமத்திலேயே தங்கிக்கொள்வதாக ரஜினி சொல்லிவிட்டார். இதைக்கேட்டு அமர் பாபாஜி நெகிழ்ந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து  மறுநாள் ரஜினி ரிஷிகேஷ் சென்றார்’’ என்றார் நல்லி குப்புசாமி செட்டியார்.

கடந்த 16 ஆண்டுகளாக ரஜினியோடு இமயமலைக்குப் பயணிக்கும் நண்பர் ஹரி. இந்தமுறையும் அவர்தான் ரஜினியோடு சென்றிருக்கிறார். அவரிடம் இமயமலையில் இருந்தபோதே பேசினோம்.

‘‘பாபாவைத் தரிசிக்க வரும் ரஜினி சார் தங்குவதற்கென்றே பிரத்யேகமாக வீடு ஒன்றைக் கட்டி அதற்கு `குருசரண்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். 2010-ம் ஆண்டில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபிறகு எட்டு வருடங்களாக ரஜினிசார் இமயமலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

சென்னையிலிருந்து கிளம்பி ரிஷிகேஷ் வந்துவிட்டாலே ரஜினிசாருக்கு குஷியாகிவிடும். சாமியார்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை, தியானம் குறித்து ஆவலாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவர்களோடு தனியாக அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பார். தன்னுடைய உயிரை மீட்டுக்கொண்டு வந்தது பாபாஜி என்று பரிபூரணமாக ரஜினி சார் நம்புகிறார். அதனால் பாபாவுக்கு நன்றி சொல்வதற்காகவும் அடுத்து அரசியலில் இறங்க ஆசீர்வாதம் பெறுவதற்காகவும் பாபாவைத் தரிசிக்க வந்திருக்கிறார்.

தினசரி அதிகாலை எழுந்து வாக்கிங் சென்றுவந்த பிறகு  தியானம்,  அதன்பின் காலை உணவாக இரண்டு இட்லி, மதிய உணவுக்கு ஒரு சப்பாத்தி, பின்னர் தியானம், மாலை வாக்கிங், தியானத்துக்குப் பிறகு இரவு உணவு என்று இமயமலையில் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் ரஜினி சார்.

முன்பு இமயமலை வந்தபோது இருந்ததைவிட இப்போது புத்துணர்ச்சி அதிகம் பெற்று உற்சாகமாக இருக்கிறார். இமயமலையில் இருக்கும் பாபா குகைக்குச் சென்று தியானம் செய்கிறார். இங்கே பிரசித்திபெற்ற சக்தி வாய்ந்த அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அங்கே சென்று வழிபடுகிறார். பாபா குகையில் தியானம் செய்து வழிபட வருகின்ற பக்தர்கள், தங்குவதற்கு  இடமில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். அதற்காகவென்றே பிரத்யேகமாக ஒரு வீட்டைக் கட்டிவந்தோம். இப்போது ரஜினி சார் அதைத் தன்னுடைய கரங்களால் திறந்துவைத்துள்ளார்’’ என்று விரிவாகப் பேசினார் ஹரி.

ரஜினியின் ஆன்மிக வாழ்க்கையைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டுவிட்டோம். ஆன்மிக அரசியல் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அனைவரும் வெயிட்டிங்!

மேலும் பல...

0 comments

Blog Archive