சசிகலா கணவர் நடராசன் காலமானார்!

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். நடராசன் சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீ...

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார்.

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.35 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிகிறது.


நடராசன் வாழ்க்கை......

தஞ்சாவூரை சேர்ந்த நடராசன் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கியவர். தி.மு.க மாணவரணியில் இருந்தபோது கருணாநிதி முன்னிலையில் சசிகலாவை மணந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி என்பதால் அரசு அதிகாரிகளுடன் நட்பு பாராட்டி வந்தார். அந்தவகையில், கலெக்டர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பால், அவர் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்கும் வேலையை தனது மனைவி நடத்தி வந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கி கொடுத்தார். இதன்மூலம் ஏற்பட்ட நட்பால் பின்னாளில் ஜெயலலிதாவுடனே சசிகலாவும், நடராசனும் தங்கினர். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அ.தி.மு.க ஜெயலலிதாவின் பக்கம் வந்தது. அ.தி.மு.க தொடர்பான அனைத்து வேலைகளையும் நடராசன் கவனித்து வந்தார். ஆனால் நாளைடைவில் ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, போயஸ்கார்டனை விட்டு வெளியேறினார். எனினும், சசிகலா அவருடன் செல்லவில்லை. போயஸ் கார்டனை விட்டு சென்றாலும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் நடராசன் ஈடுபட்டு வந்தார்.

சொந்த ஊரில்...

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைத்த பிறகு அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால், தஞ்சாவூரில் உள்ள அவரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் என அவரது வீட்டில்  கூட தொடங்கியுள்ளனர்.

பெசன்ட் நகர் வீட்டில் ஏற்பாடுகள்...

நடராசன் உடலுக்கு எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதற்காக பெசன்ட் நகர் வீட்டில் தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

பரோலில் வருகிறார் சசிகலா....

நடராசன் மரணத்தை தொடர்ந்து சசிகலா பாரோலில் வரவுள்ளார். ஏற்கனவே பரோல் கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இறப்பு சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது உதவியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive