`மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க எங்கிட்ட ஐடியா இருக்கு!" - கலக்கும் கரூர் விஞ்ஞானி

இன்று சுற்றுச்சூழலுக்கு ஏக கேடு விளைவிப்பதோடு, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வஸ்து எதுவென்றால், அது கண்டிப்பாக பிளாஸ்டிக்தான். இங்க...

இன்று சுற்றுச்சூழலுக்கு ஏக கேடு விளைவிப்பதோடு, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வஸ்து எதுவென்றால், அது கண்டிப்பாக பிளாஸ்டிக்தான். இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து, நீர்நிலைகள், நிலத்தடி நீர், எரித்தால் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுகளை வெளிப்படுத்துதல் என்று மனிதகுலத்துக்கு எமனாக இருக்கிறது பிளாஸ்டிக். தமிழக அரசு தாமதமாக உணர்ந்தாலும், வரும் 2019 ம் வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

``இதற்கு மாற்று என்ன? இந்தத் திடீர் தடையால் பிளாஸ்டிக் வஸ்துகளை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன வழி?" என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, ``2019 ம் வருடத்திலிருந்து, `இனி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது' என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நல்ல விஷயம். ஆனால், இப்போது டன் கணக்கில் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த என்ன வழி?" என்று சமூக ஆர்வலர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்கு பதிலாக, பிரத்யேக மெஷின்கள் மூலம் எல்லா பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிப்பதோடு, அவற்றிலிருந்து டீசலைவிட தரம் வாய்ந்த பயோ டீசலைத் தயாரிக்க முடியும் என்று அடித்துச் சொல்கிறார் காஜா மொயிலுதீன்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்தான் இந்த காஜா மொயிலுதீன். இவர்தான், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை தனது பிரத்யேக மெஷினால் அழிப்பதோடு, அந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலை விட தரம் வாய்ந்த பைரோ ஆயிலை எடுக்க முடியும்' என்று சொல்கிறார். இதுபற்றி, அவரிடம் பேசினோம்.

``நான் ஒன்பதாவதுதான் படிச்சுருக்கேன். சின்ன வயசிலிருந்து எதையாவது கண்டுபிடிச்சுகிட்டே இருப்பேன். திருச்சியில் இப்போ பழைய இரும்புப் பொருள்களையும் பிளாஸ்டிக் பொருள்களையும் வாங்கும் கடையை வெச்சுருக்கேன். இருந்தாலும் இன்னொரு பக்கத்துல எதையாவது புதுசு புதுசா கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன். சென்னையில் ஒரு காது குடையிற பட்ஸ் தயாரிக்கிற கம்பெனியில் வேஸ்டான 300 பட்ஸை ஓர் இடத்துல மலைபோல் குவிச்சு வெச்சுருந்தாங்க. 30 கோடி மதிப்புள்ள இடமும் வீணாகிக் கொண்டிருந்தது. அதை அழிக்க படாதபாடுபட்டாங்க. அதை அழிக்கிறதா சொல்லி எத்தனையோ கம்பெனிகள் வந்து, அதை அழிக்க முடியாம கைவிரிச்சுட்டு போனாங்க. ஆனால், நான் தயாரிச்ச மெஷினை வெச்சு அதை சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாம அழிச்சுக் காட்டினேன்.

இந்நிலையில்தான், `பிளாஸ்டிக்குகளை அழிக்கிற மெஷினைக் கண்டுபிடிச்சா என்ன?'ன்னு தோணுச்சு. ஆராய்ச்சியில இறங்கிட்டேன். பலவற்றைக் கண்டுபிடிச்சேன். திருப்தியில்லை. அப்போதான், பிளாஸ்டிக்கோட பிறப்பிடத்திற்கே போனா என்னன்னு தோணுச்சு. பிளாஸ்டிக்கை அழிச்சு, டீசல் தயாரிக்கலாம்ங்கிற ஆராய்ச்சியில இறங்கினேன். ஏற்கெனவே, சித்ரா தியாகராஜன், பேராசிரியர் சரவணன் உள்ளிட்டவர்கள் பிளாஸ்டிக்கிலிருந்து பைரோ ஆயில எடுக்கும் முயற்சியைச் செஞ்சுருக்காங்க. ஆனா, அவங்க மக்காத பிளாஸ்டிக் குப்பையிலிருந்து அதை பண்ணலை.

அதனால், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை திரவ எரிபொருளா மாத்துற இயந்திரத்தை மூன்று வருட முயற்சியில் கண்டுபிடிச்சேன். நான் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எடுத்த பைரோ ஆயிலைச் சோதித்த திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனப் பேராசிரியர், `இது டீசலைவிட பெட்டரா இருக்கு'ன்னு சர்ட்டிஃபிகேட் பண்ணினார். ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் 700 மில்லி லிட்டர் பைரோ ஆயில் எடுக்கலாம். முதல்கட்டமாக இந்த மெஷினரி கொண்ட தொழிற்சாலை அமைப்பைப் பள்ளப்பட்டியில் அமைத்திருக்கிறேன். இதற்கு பண உதவியை ஜியாவுல்ஹக், ரியாஜூல்ஹக் ஆகிய இரு சகோதரர்கள் செஞ்சாங்க. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் பொருள்களில் நட், போல்ட்டைத் தவிர மத்த அனைத்தையும் நானே சொந்தமாக வடிவமைச்சுருக்கேன். இந்த பைரோ ஆயிலானது பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக எரித்து எடுக்கப்படுவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை இந்தத் தொழிற்சாலையில் 300 டிகிரி டூசு ஏற்றி, அதன்மூலமாக இந்த பைரோ ஆயில் எடுக்கப்படுவதால்,புகை வராமல் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையாது. 300 டிகிரி வெப்பத்தில், ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை உருக்கும்போது, அதன் மூலக்கூறுகள் உடைந்து அதிலிருந்து ஆவி வெளிப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம், அதிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு, ஹைட்ரோகார்பன் வாயு அதே இயந்திரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைக்கு நைட்ரஜன் வாயு வினையூக்கியாகச் செயல்படுத்தப்படுகிறது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பைரோ ஆயிலாக மாறியபிறகு, கடைசியாக கார்பன் பிளாக் எனும் கரிப்பொருள் கிடைக்கிறது. இது 6000 கலோரிஃபிக் பவர் உள்ளது. இதை சிமென்ட் தொழிற்சாலை, மின் உற்பத்தி தொழிற்சாலை பாய்லர்களுக்கு எரிபொருளாக உபயோகப்படுத்தலாம். இந்த இயந்திரத்தைக் குளிர்விக்க நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த நீரை சுழற்சி முறையில் இயங்குவதால் நீர்த்தேவை அதிகளவில் இருக்காது. இந்த இயந்திரம் மூலம் உலகமே பயந்து நடுங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தமாக மதிப்புக்கூட்டப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

 பிளாஸ்டிக்கில் இருந்து பைரோ ஆயில்

இந்த முறையில் தமிழ்நாடு முழுக்க உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அழித்து, பைரோ ஆயிலைத் தயாரிக்க முடியும். சாதாரண டீசலை கொஞ்சகாலம் சும்மா வைத்திருந்தால், கெட்டுப் போயிரும். ஆனால், இந்த பைரோ டீசல் எத்தனை நாள் சும்மா வைக்கப்பட்டிருந்தாலும் கெடாது. இந்தத் திட்டத்தை முதலில் கரூரில் செயல்படுத்தலாம்ன்னு நினைச்சு, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனைப் போய் பார்த்தேன். அவர் ஆர்வமாகி, ஊக்கப்படுத்தியதோடு, `கரூர் மாவட்டத்தில் இதை இம்ப்ளிமென்ட் பண்ணுவோம்'ன்னார். அடுத்து, டவுன் பஞ்சாயத்து துணை இயக்குநர் குருசாமியைச் சந்தித்து இதை விளக்கினோம். ஆர்வமான அவர், முதலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பேரூராட்சிகளில் முதலில் இதைப் பயன்படுத்திப் பார்க்க அனுமதி அளித்துள்ளார். எனது இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருந்தால், மாவட்டம் முழுக்க பண்ணலாம்ன்னு சொல்லி இருக்காங்க. தமிழ்நாடு அரசு இதற்கு ஒத்துழைத்தால் தமிழ்நாடு முழுக்க இதை விரிவுபடுத்தி, தமிழகத்தை ஒரு பிட்டு பிளாஸ்டிக் கழிவுகூட இல்லாத மாநிலமாக மாற்ற முடியும். இந்த மெஷினரி இன்னும் சிறிய அளவில் நவீனமாக அமைத்து அனைத்து ஊர்களிலும் நிறுவி, எல்லா பிளாஸ்டிக் கழிவுகளையும் அழித்துவிட முடியும்" என்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive