மோடி பாபாவும் 40 அமைச்சர்களும்!

மோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவ...

மோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் படும் கஷ்டத்தைவிடவா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று மிகப்பெரிய தேசபக்தர்களாக மாறி சீறுவார்கள்.

தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான பொருள் என்பதைப்போல பொங்கும் அவர்கள்தான், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையைத் தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான காரணமாக இருப்பார்கள். மாடுகளைவிட மனித உயிர்களை இழிவாக கருதுவார்கள்.

1998 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் கார்கில் போரில் இந்திய வீரர்கள் உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றி அரசியல் செய்தார்கள். அந்தப் போர் முடிந்தபிறகுதான் இறந்த வீரர்களை அடக்கம் செய்வதற்காக வாங்கிய சவப்பெட்டியில்கூட பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகியது.

பொதுவாகவே காங்கிரஸ் மற்றும் வேறு அரசுகள் ஆட்சியில் இருக்கும்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல்களை பாஜக பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்வது வாடிக்கை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய ராணுவத்தை பலம்பொருந்தியதாக மாற்றி இரண்டு நாடுகளும் பயந்து நடுங்கச் செய்யமுடியும் என்று மார்தட்டுவது வழக்கம்.

ஆனால், 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரம் அதிகரித்தது. இந்திய சீன எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

இந்நிலையில்தான், இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி செய்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து, இதுவரை எந்த பிரதமருக்கும் இல்லாத வகையில், எனது பிரதமர் ஒரு திருடர் என்ற அர்த்தப்படும்படி, “மேரா பிஎம் சோர் ஹே” என்ற ஹேஸ் டேக்கில் மோடிக்கு எதிரான பதிவுகளைப் போட்டு உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டியதை ஒப்புக்கொள்ளும்வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியளித்தார்.

பிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிக்கவும், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவும்,  அனில் அம்பானிக்கு சொந்தமான  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசு தேர்வு செய்வதற்கு வசதியாக இரண்டு நிறுவனங்களை இந்திய அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்று ஹோலண்டே கூறியிருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, 10 நாட்களுக்கு முன் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவசரமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை மோடி அரசு பிரான்ஸுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதைத்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹோலண்டே அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 இதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது. ஹோலண்டே இப்படி பேட்டி கொடுத்ததும் நிதியமைச்சர் ஜெட்லியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கொந்தளிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக வெளிநாட்டுடன் சதி செய்கிறது என்று ஜெட்லி கூறினார். ராகுலும் ஹோலண்டேயும் கூடிப்பேசி பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். பிரான்ஸுக்கே சென்று இதுதொடர்பாக போராடப் போவதாக நிர்மலா கூறினார். ஒப்பந்தம்போடும்போது அதிபராக இருந்தவர் ஹோலண்டே. அவரே, நடந்த உண்மையைச் சொல்கிறார். பொய் சொல்வதில் புகழ்பெற்ற பாஜக அமைச்சர்களோ ஹோலண்டே சொல்வதை பொய் என்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உண்மைக்கு மாறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் அவருடைய எதி்ர்காலம் என்னாகும் என்பது ஹோலண்டேவுக்கு தெரியும். அங்கு மீடியாக்கள் இந்திய மீடியாக்களைப் போல ஆளும் அரசின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருப்பவை அல்ல என்பது நிர்மலாவுக்கு புரியாதது அல்ல. ஹோலண்டே சொன்னது குறித்து தற்போதைய அதிபர் மேக்ரானும் மறுப்பு சொல்லவில்லை. இப்போதும் பொய்களால் பூசிமெழுகவே பாஜக அரசு முயற்சி செய்கிறது.

ஆனால், ராகுல் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதே ரஃபேல் போர் விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்திய விமானப்படைக்காக வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதாகவும், அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று ராகுல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக ராகுல் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது. அதையும் மீறி, புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு பராமரிப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி உரிமையை பெற்றுக் கொடுத்தது ஏன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் ராகுல். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ராகுல் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.

இப்போது, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட அதிபரே உண்மையைச் சொல்லும்போதும், ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மோடி தவிர்க்கிறார். மோடி மவுனம் சாதித்தாலும், ராகுல், மோடியின் அனைத்து தில்லுமுல்லுகளையும் திருட்டுகளையும் அம்பலப்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

“ரஃபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது. இனிமேல்தான் விஷயம் சுவாரஸ்யமாகப் போகிறது. விஜய் மல்லையா விவகாரம், லலித் மோடி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விவகாரம் என்று எல்லாவற்றிலும் மோடியின் திருட்டுகள் அம்பலமாகும். மோடி நாட்டின் பாதுகாவலர் அல்ல. கொள்ளைக்காரர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்…

பழுத்த அனுபவம்மிக்க இந்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைத்தான் காங்கிரஸ் அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் மரியாதையையும், இந்திய விமானப்படை அதிகாரிகளின் மரியாதையையும் திருட முயற்சி செய்த மோடியிடமிருந்து நீதியைப் பெற்றே தீருவோம்” என்று ராகுல் உறுதியளித்திருக்கிறார்.

இதனிடையே, அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, மோடி பாபாவும், அவருடைய 40 அமைச்சரவை சகாக்களும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் கேட்டிருக்கிறது. 2019 தேர்தலில் மக்கள்தான் மோடிக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்.

மாய பிம்பத்தை உருவாக்கி பிரதமரான மோடி, இப்போது நிஜமான ஊழல் வலைக்குள் சிக்கிவிட்டார்.

மேலும் பல...

0 comments

Blog Archive