பாகுபலி கதை தெரியும்... பாகுபலி துவங்கிய கதை தெரியுமா?

ஒரு திரைப்படம் உருவாகும் முன்பு அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் என்பது முக்கியம். மிக எளிமையான படம் எடுக்கும் போது கூட அதற்கான முன் தயாரிப்பு வேலை...

ஒரு திரைப்படம் உருவாகும் முன்பு அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் என்பது முக்கியம். மிக எளிமையான படம் எடுக்கும் போது கூட அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் முக்கியம் எனும் போது, ஆயிரக்கணக்கான நடிகர்கள், க்ரீன் மேட், பீரியட் ஃபிலிம், கற்பனையாக எழுதிய வரலாற்றுக் கதையை நிஜமாகவே நடந்தது போன்ற ஒரு காட்சிப்படுத்தலின் அவசியம் என பல பொறுப்புகள் உள்ள படத்தை உருவாக்குவதற்கு எத்தனை திட்டமிடலும் எவ்வளவு மெனக்கெடலும் தேவைப்படும்? அப்படி மனித உழைப்பை சலிக்காது தின்று செரித்த படமான ராஜமௌலியின் 'பாகுபலி த பிகினிங்' வெளியாகி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிறது.

பாகுபலி கதை நமக்குத் தெரியும். பாகுபலி துவங்கிய கதை அதையும் விட சுவாரஸ்யமானது. கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ராஜமௌலியிடம், ஒரு பெண் ஆற்று நீரில் மூழ்கியபடி கையில் ஒரு குழந்தையைத் தாங்கிக் கொண்டே வருகிறாள் அவள்தான் சிவகாமி எனச் சொல்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு கட்டாப்பாவின் கதாபாத்திரம் பற்றி சொல்கிறார். இப்படியே ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் இந்தக் கதை மீது மிகுந்த ஆர்வமாகும் ராஜமௌலி, முழுக்கதையையும் எழுதச் சொல்கிறார். மூன்று மாதத்தில் கதை வடிவமாக பாகுபலி ரெடி. இங்கிருந்து இதைப் படமாக மாற்றும் வேலைகள் அத்தனை சுலபமானதா என்ன, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுகிறார்கள். பாகுபலி என்றால் அவன் எப்படிப்பட்டவன்? என்ன கேள்விகேட்டால் எப்படி பதில் சொல்வான் என்பது துவங்கி அவனுக்கு என இருக்கும் பின்புலக் கதைவரை அனைத்தையும் தயார் செய்கிறார்கள். 15,000க்கும் அதிகமான ஸ்டோரி போர்டுகள் வரையப்படுகிறது.

ஒரு பக்கம் குதிரை ஏற்றம், வாள்வீச்சு என நடிகர்கள் பயிற்சி பெறுகிறார்கள், இன்னொரு பக்கம் சாபு சிரில் தலைமையில் மகிழ்மதி வாயில் துவங்கி போர்களத்தில் பயன்படுத்தும் வாள்கள் வரை அத்தனையும் தயாராகிறது. சரி மிகப் பெரிய பட்ஜெட் படம். கண்டிப்பாக இதை எப்படியும் செலவு செய்து எடுத்துவிட முடியும். ஆனால், எப்படி வியாபாரம் செய்வது, எப்படி லாபம் பெருவது. நஷ்டமடைந்தால் திரும்பி எழவே சிரமமான காரியமாக இருக்கும். பின்பு வெளியாகப் போகும் பாகுபலி 2வையும் இது பாதிக்கும். ராஜமௌலி தன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷோபுவிடம் பேசுகிறார். ஷோபு கொஞ்சமும் பதற்றமில்லாமல் ஒரு பதில் சொல்கிறார். "பட்ஜெட் பெருசுதான், அதுக்காக படம் எடுக்காம இருக்க முடியாது. ஆனா, ஒரு வழி இருக்கு. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி வியாபாரத்தையும் பெருசு பண்ணுவோம். அனிமேஷன், வீடியோ கேம்ஸ், டிவி சீரிஸ், காமிக்ஸ்னு எல்லா விதத்திலும் சந்தைப்படுத்துவோம். எல்லா மொழிகள்லையும் படத்தைக் கொண்டு சேர்ப்போம்"

அவ்வளவுதான் ராஜமௌலிக்கு மீண்டும் பிறக்கிறது உற்சாகம். குதிரை ஏற்றமோ, குளிர்ந்த நீருக்கு அடியில் ஷூட்டிங்கோ எதுவாக இருந்தாலும் முதலில் தான் இறங்கி முயற்சிக்கிறார். ஆம், திரையில் பாகுபலி செய்த எல்லாவற்றையும் தானும் முயல்கிறார். பிறகு படக்குழுவுக்கு அதை எப்படி கையாளவேண்டும் எனக் கற்றுத்தருகிறார். இப்படியாக மெல்ல மெல்ல மகிழ்மதி சாம்ராஜ்யத்தை தன் குழுவினருடன் கட்டி எழுப்புகிறார். ஒரு பாகமாக எடுக்க நினைத்து, படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு பாகம் இருந்தால்தான் முழுக்கதையும் சொல்ல முடியும், இல்லை என்றால் நான் விரும்பியதை முழுமையாகக் கொண்டுவர முடியாது என நினைக்கிறார். ஒரே மூச்சாக இரண்டு பாகங்களையும் முடித்து, முதல் பாகம் வெளியாகி நான்கு மாத இடைவெளியில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடத் திட்டமிடுகிறார். ஆனால், அதில் முக்கால் கிணறுதான் தாண்ட முடிகிறது. ஆனால், ராஜமௌலிக்கு தன் உழைப்பு மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. முதல் பாகத்தை வெளியிடுகிறார். க்ளைமாக்ஸைப் பார்த்து மிரண்டு நின்றது திரையுலகம். 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்ற கேள்வி ட்ரெண்டாகிறது. ‘நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா?’ போல எல்லாருடைய உரையாடல்களிலும் ‘பாகுபலிய ஏன் கட்டப்பா கொன்னான்?’  இடம் பெறுகிறது.  பெரிய பரபரப்பை உருவாக்குகிறது.

அதற்கு பதிலாக இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு பாக்ஸ் ஆஃபீசை அடித்து துவம்சம் செய்கிறார். "முதல் பாகத்தில் ஏற்றியிருந்த எதிர்பார்ப்புதான் என் இரண்டாம் பாகத்திற்கான மூலதனம். கண்டிப்பா ஆடியன்ஸ் வந்திடுவாங்க" என அசாத்திய தைரியத்தில் இருக்கிறார் ராஜமௌலி. அவரின் தைரியம் நிஜமாகிறது. உலகம் முழுக்க ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து கால்மேல் கால் போட்டு அமர்கிறது பாகுபலி. "அப்படி என்ன பாகுபலி சிறந்த படம்? அதுல என்ன சொல்லிட்டாங்க, வெறும் பிரமாண்டம் மட்டும்தான் இருக்கு" என்ற நெகட்டிவ் விமர்சனங்களும் எழத்தான் செய்தது. உண்மையில் நம் சினிமாவின் எல்லை, வியாபாரச் சாத்தியங்கள் எல்லாவற்றிற்குமான வழியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது பாகுபலி மற்றும் பாகுபலி 2. அந்த வகையில் அது தவிர்க்கவே முடியாத சினிமாவாகிறது.

பரிசோதனை முயற்சிகளின் மீது, பாகுபலி பட்ஜெட்டையும், வசூலையும் விட பெரிய அளவில் நம்பிக்கை உள்ளவர் ராஜமௌலி. மகதீராவும், 'ஈகா'வும் பாகுபலிக்கான பரிசோதனை முயற்சிகள் என்று டோலிவுட்டில் அடிக்கடிச் சொல்லப்படும். எனக்குத் தெரிந்து பாகுபலியே, மகாபாரதம் எடுப்பதற்காக ராஜமௌலி செய்த பரிசோதனை முயற்சி என்றுதான் தோன்றும்.

ராஜமௌலி: "இந்தப் படத்தை ஏன் எடுத்தேன் தெரியுமா?"

விஜயேந்திர பிரசாத்: "ஏன்?"

ராஜமௌலி: "என் வாழ்நாள் லட்சியமே மகாபாரதத்தை எடுப்பதுதான். அதற்கு முன்னோடி இந்த பாகுபலி. என்னை நான் பரிசோதித்துக் கொள்ள விரும்புகிறேன். இதில் நான் வென்றுவிட்டால், கண்டிப்பாக என்னால் மகாபாரதத்தை எடுக்க முடியும், எடுப்பேன்"

பாகுபலி படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் ராஜமௌலிக்கும் அவரது தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்துக்கும் இடையேயான உரையாடல் இது. 'மகாபாரதம்' மூலம் கண்டிப்பாக இன்னும் பல கதவுகளைத் திறப்பார் என நம்பலாம். ஜெய் ராஜமௌலி!

மேலும் பல...

0 comments

Blog Archive