`நடிகனான என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்' - தூத்துக்குடி கிளம்பிய ரஜினிகாந்த்!

'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ...

'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. எனினும், உயிரைத் துச்சமென நினைத்து நடத்திய போராட்டத்தின் பயனாக, தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து தமிழக அரசு சீல்வைத்தது. இந்தத் தடைகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்தாலும், இதன்மூலம் தூத்துக்குடி மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். மேலும், இதனால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவருகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு தலைவர்களும், அரசு சார்பில் துணை முதல்வரும் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று தூத்துக்குடி கிளம்பினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன். ஆறுதல் கூறினால் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னைப் பார்த்தால், இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை தி.மு.க புறக்கணித்தது பற்றிப் பேச விரும்பவில்லை. தி.மு.க-வை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வை தி.மு.க-வும் விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனினும், பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம்; அதனால் பயனில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து மனித உரிமை கமிஷன் விசாரித்துவருகிறது. அதில் உண்மை தெரியவரும்" என்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive