ரஜினி-முருகதாஸ்... விஜய்-இரஞ்சித்! மாறிய கூட்டணி பின்னணி

ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே அடுத்த படத்துக்கான கதையைக் கேட்பது ரஜினியின் வழக்கம். ஒரே ஒரு இயக்குநர் என்றில்லாமல் ஜூனியர், சீன...

ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே அடுத்த படத்துக்கான கதையைக் கேட்பது ரஜினியின் வழக்கம். ஒரே ஒரு இயக்குநர் என்றில்லாமல் ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடின்றி அடுத்தடுத்து பல இயக்குநர்களிடம் கதை கேட்பார். அப்படித்தான் `காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன் அடுத்த படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ், அட்லி, அருண்பிரபு புருசோத்தமன் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டார். அதில் கார்த்திக் சுப்புராஜின் கதையைத் தேர்வு செய்த ரஜினி தற்போது டார்ஜிலிங்கில் அதன் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆனால் இந்தச் செய்தி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைப் பற்றியது அல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கவேண்டிய படத்தைப் பற்றியது.

ஆம், `கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நிலையில் இதேபோல் பல இயக்குநர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தன. அதில் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு முடித்ததும், `இது பேங்க்ல போட்ட டெபாசிட் மாதிரி. எப்ப வேணும்னாலும் இந்தக் கதையில் நடிக்கலாம். எப்ப நடிச்சாலும் இந்தப் படம் ஹிட்’ என்று கூறி வெற்றியைக் காத்திருக்கச் சொன்னார் ரஜினி. இதேபோல முருகதாஸ் சொன்ன கதையைக் கேட்டதும், அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்ட ரஜினி, `இதுதான் என் அடுத்த படம். டெஃபனேட்டா இதுல நாம சேர்ந்து வொர்க் பண்றோம்' என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார். அது ஆக்ஷன் கலந்த அரசியல் கதை. அதை முருகதாஸ் ரஜினிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கியிருந்தார்.

இதற்கிடையில் `கபாலி’ படம் வெளியானது. தயாரிப்பாளர் தாணுவின் ப்ரமோஷன், ரஜினியின் வித்தியாச நடிப்பு... என்று `கபாலி’ மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் விஜயைச் சந்தித்து, `இரஞ்சித் டைரக்‌ஷன்ல நடிக்க உங்களுக்கு விருப்பமா தம்பி’ என்று கேட்டார். `நான் `கபாலி' பார்த்தேண்ணே. எனக்குப் படம் ரொம்பப் பிடிச்சது. இரஞ்சித்கிட்ட எனக்குத் தகுந்த மாதிரி கதையை ரெடி பண்ணச்சொல்லுங்க. நான் நிச்சயம் நடிக்கிறேன்' என்று விஜய் சம்மதித்திருக்கிறார். இரஞ்சித்தும் விஜய்க்கான ஸ்கிரிப்ட் தயாரிப்புப் பணியைத் தொடங்கினார்.

இந்தநிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கத் தயாராகிவந்தார் ரஜினி. ஆனால், அப்போது முருகதாஸ், மகேஷ்பாபு நடிக்கும் `ஸ்பைடர்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். `ஸ்பைடர்’ படத்தை முடிக்க எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்ற சூழல். அந்தச் சமயத்தில்தான், `வர்த்தகம், விமர்சனம் என்கிற இரண்டு வகையிலும் நற்பெயரைப் பெற்றுத்தந்த `கபாலி’ இயக்குநர் இரஞ்சித்துக்கே மீண்டும் படம் தந்தால் என்ன’ என்று ரஜினி யோசிக்க ஆரம்பித்தார். அதுவே சரியென்றும் அவருக்குத் தோன்றியது.

இன்னொருபக்கம் விஜய்க்கான கதை தயாரிப்பில் இருந்தார் இரஞ்சித். இந்தச் சமயத்தில் ரஜினியிடமிருந்து வந்த மறு அழைப்பு இரஞ்சித்துக்கே இன்ப அதிர்ச்சி. ஏனெனில், `கபாலி' கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது இரஞ்சித்திடம் ரஜினி, `முருகதாஸ் சொன்னது ஃபென்டாஸ்டிக் ஸ்டோரி. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுத்ததா நான் அந்தப் படம்தான் பண்றேன்' என்று சொல்லி மகிழ்ந்தாராம். `அந்தக் கதையைப் அப்படிப் பாராட்டியவர் மீண்டும் ஏன் தனக்கே அடுத்த பட வாய்ப்பை வழங்க வேண்டும்’ என்று இரஞ்சித்துக்கு இன்ப அதிர்ச்சி. அதன்பின் மகள் செளந்தர்யா மூலம் இரஞ்சித் போயஸ்கார்டன் அழைக்கப்பட்டார். இரஞ்சித், ரஜினி, தனுஷ் மூவரும் ஆலோசனை செய்தனர். `காலா' அறிவிக்கப்பட்டது.

அதுசரி ரஜினிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அந்தக் கதை என்னாயிற்று என்று கேட்கிறீர்களா? அதில்தான் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகிக்கொண்டிருக்கும் படத்தின் கதை, ரஜினிக்காக உருவாக்கப்பட்டதுதான். தலைவர் ஓ.கே பண்ணின கதையில் தளபதி. ஆக்ஷன், அரசியல் என்று அடி பின்னுமாம்.

மேலும் பல...

1 comments

  1. சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம வெப்சைட் நல்ல வெப்சைட்.
    http://mkcinema.in/

    ReplyDelete

Blog Archive