டிராபிக் ராமசாமி / விமர்சனம் - நீதிமன்றத்தின் நியாயத் தராசு… நடமாடும் பீரங்கி…

நீதிமன்றத்தின் நியாயத் தராசு… நடமாடும் பீரங்கி… நட்டு வைத்த வெட்டருவா… என்றெல்லாம் நாடு போற்றும் ஒரு மனுஷனை, தேடிப் போய் சிறுமை படுத்தியிரு...

நீதிமன்றத்தின் நியாயத் தராசு… நடமாடும் பீரங்கி… நட்டு வைத்த வெட்டருவா… என்றெல்லாம் நாடு போற்றும் ஒரு மனுஷனை, தேடிப் போய் சிறுமை படுத்தியிருக்கிறார்கள். ‘டிராபிக் ராமசாமி’ என்கிற பிடறி சிங்கம், சினிமா என்கிற சின்ன பொறிக்குள் இடறி விழுந்திருக்கிறது. இ.பி.கோ வில் என்னனென்ன அபாயம் இருக்கோ, அவ்வளவும் போய் சேரட்டும் அவர்களை!

கடந்த சில வாரங்களுக்கு முன்தான் சாவித்ரியின் பயோபிக் வந்து நாட்டையே தாலாட்டிவிட்டு போனது. கிட்டதட்ட அப்படியொரு பயோபிக்தான் இதுவும். ஆனால் பயோ ‘சிக்’ என்று சொல்லும்படியான திரைக்கதை. காட்சியமைப்பு. இன்னபிற இம்சைகள்…!

கண்ணெதிரே நடக்கும் சமூக விரோத செயல்களையெல்லாம் தட்டிக் கேட்கும் பழக்கமுள்ள ராமசாமி, மீன் பாடி வண்டிகளால் செய்யப்படும் திட்டமிட்ட கொலைகளை அம்பலப்படுத்த கிளம்புகிறார். அவருக்கு தரப்படும் பிரம்படி பிரசாதங்களும், நரம்படி தாக்குதல்களுமே படத்தை பாதிக்கும் மேல் ஆக்ரமித்துவிட, கதையை கோர்வையாக ஒட்டவே முடியாமல் திணறியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி. ஏதோ நானும் படம் எடுத்தேன் என்று சொம்பை கச்சேரி செய்ய உங்களுக்கு டிராபிக் ராமசாமிதான் அகப்பட்டாரா தம்பி?

விஜய் சேதுபதி தன் சொந்த கண்களால்(?) டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதாக துவங்குகிறது படம். ஒரே மூச்சில் அவர் படித்து முடிக்கிறார். நமக்குதான் மூச்சு வாங்குகிறது. இந்த படத்திற்கு ஏன் விஜய் சேதுபதி? அப்புறம் சீமான், குஷ்பு, விஜய் ஆன்ட்டனியெல்லாம் ஒரு காட்சியில் தோன்றி உரம் போட்டிருக்கிறார்கள்.

நாலா புறமும் சுற்றி வளைத்துத் தாக்கப்படும் எஸ்.ஏ.சி யை விஜய் ஆன்ட்டனி காப்பாற்றும் அந்த அரை நிமிஷ சீனில் கூட, நடிப்பேனா என்கிறார் எஸ்.ஏ.சி யின் சிஷ்யர் வி.ஆ!

படத்தின் ஒரே ஆறுதல் எஸ்.ஏ.சி தான். அவ்வளவு பெரிய மனுஷன்… முதியவர்… நிஜமாகவே சேற்றில் விழுந்து சில்லரைகளால் மிதிபட்டு பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வாங்கி விட்டோம் என்கிற சந்தோஷத்தில் ஒரு வெற்றி நடை நடக்கிறாரே… செம ஸ்மார்ட்! மற்றபடி அவரது குடும்ப பின்னணி, வசதியான வாழ்க்கை முறை இவையெல்லாம் ஒட்டவே இல்லை.

நாலைந்து காட்சிகள் வந்தாலும் நறுக் தெறிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். ஒரு ரவுடி ராமசாமிக்கு உதவுவதும், அதே ரவுடியின் தனக்கான கொலைகளை அதே ராமசாமி கண்டுகொள்ளாமல் இருப்பதும் திரைக்கதை அழுக்கு.

நீதிமன்றத்தையும், பெண் நீதிபதிகளையும் இவ்வளவு துச்சமாக வேறெந்த சினிமாவும் காட்டியிருக்கிறதா? டவுட்…

பாலமுரளியின் இசையில் பெரிய ஈர்ப்பு இல்லை.

ஒரு காலத்தில் சட்டத்தை கதையாக எழுதி தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட எஸ்.ஏ.சி மறுபடியும் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். ஒரு வாரம் கழித்து அதே சட்டத்தால், செய்வியா? செய்வியா? என்று தலையிலடித்துக் கொண்டால் கூட ஆச்சர்யமில்லை!

மேலும் பல...

0 comments

Blog Archive