நிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்! - விமர்சனம்

ஒரு திருடனும், டாக்டரும், போலீசுடன் நடத்தும் யுத்தம் தான் கடாரம் கொண்டான். படத்தின் முதல் காட்சியில் மலேசியாவின் டிவின் டவரின் ஒரு மாடியில்...

ஒரு திருடனும், டாக்டரும், போலீசுடன் நடத்தும் யுத்தம் தான் கடாரம் கொண்டான்.

படத்தின் முதல் காட்சியில் மலேசியாவின் டிவின் டவரின் ஒரு மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பி ஓடி வருகிறார் விக்ரம். அவரை இரண்டு பேர் விரட்டி வந்து கொல்ல முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் வரும் பைக் விக்ரம் மீது மோதி தலையில் அடிப்பட்டு மயக்கமடைகிறார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.

விக்ரம் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சேர்கிறார் அபி. அவருடைய மனைவி அக்ஷரா நிறைமாத கர்ப்பிணி. மனைவியை வீட்டில் தனியே விட்டுவிட்டு, இரவில் மருத்துவமனைக்கு வேலைக்கு வருகிறார் அபி. விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் தான் அபிக்கு டியூட்டி. யாரோ சிலர் விக்ரமை கொல்லப் பார்க்கிறார்கள். உயிருக்குப் போராடும் விக்ரமை அபி காப்பாற்றுகிறார். போலீஸ் விசாரணையில் விக்ரம் ஒரு திருடன் என்பது தெரியவருகிறது.

காலை வீடு திரும்பிய அபியை தாக்கி, அக்ஷராவை கடத்திச் செல்கிறார் விக்ரமின் தம்பி நந்தா. மருத்துவமனையில் இருந்து விக்ரமை வெளியே கொண்டுவந்தால், அக்ஷராவை ஒப்படைப்பதாக மிரட்டுகிறார். வேறு வழியே இல்லாத நிலையில், போலீசை ஏமாற்றி விக்ரமை வெளியே அழைத்து வருகிறார். இதனால் அபியும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கப்படுகிறார். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபியும், அக்ஷராவும் என்ன ஆனார்கள்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிப்படம்.

கிட்டத்தட்ட விக்ரம் வேதா படத்தின் கதையும் கடாரம் கொண்டான் கதையும் ஒன்று தான். ஆனால் இது 'பாய்ண்ட் பிளாங்க்' எனும் பிரெஞ்ச் படத்தின் ரீமேக். ஏற்கனவே கொரிய மொழியில் 'தி டார்கெட்' என்ற பெயரில் ரீமேக்காகி இருக்கிறது. தற்போது நெட்பிளிக்சில் 'பாயிண்ட் பிளாங்க்' ஆங்கிலப்பதிப்பும் வெளியாகியுள்ளது.

பாயிண்ட் பிளாக் படத்துக்கும் கடாரம் கொண்டான் படத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஒரிஜினலை கெடுக்காமல் அப்படி எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ம.செல்வா. ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது படத்தின் மேக்கிங். கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.

முதல் பாதி சைலண்டாகவும், இரண்டாம் பாதியில் வைலண்டாகவும் கெத்து காட்டியிருக்கிறார் விக்ரம். கெட்டப்பிலும் சரி, லுக்கிலும் சரி, செம மாஸ், ஸ்டைலிஷ் சீயான். முழு படத்துக்கும் சேர்த்து ஒரு பக்க வசனம் கூட விக்ரமுக்கு இல்லை. சின்ன சின்ன கண்ணசைவுகளால் கொள்ளை கொள்கிறார். குறிப்பாக துப்பாக்கி காட்டி நிற்கும் அபியை, அநாயசமான ஒரு பார்வையில் கடந்து போகும் அந்த காட்சி, வாவ் செம தூள். தில்லாக நெஞ்சம் நிமிர்த்தி, கடாரம் கொண்டானாக மாறியிருக்கிறார்.

அக்ஷராவுக்கு கொஞ்சம் நேரம் மட்டும் தான் படத்தில் வேலை. ஆனால் வரும் ஒவ்வொரு பிரேமிலும் தடம் பதிக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் கதறும் போது, நம் உள்ளம் பதறுகிறது. நாசரின் மகன் அபி ஹசனுக்கு படத்தில் நிறைய வேலை இருக்கிறது. நிறைவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரிகள் லேனா, வின்சென்ட் ராஜதுரை உள்பட அனைவரும் சரிவிகித நடிப்பை தந்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசையில் 'தாரமே தாரமே' சாரல் மழையாய் நனைக்கிறது. பின்னணி இசையில் அதிரடியாய் முழங்கியிருக்கிறார். மான்டேஜாய் ஒலிக்கும் 'வேறென்ன வேணும் நீ மட்டும் போதும்' பாடல் சுனாமிக்கு மத்தியில் தென்றலாய் வீசுகிறது.

ஸ்ரீனிவாஸ் குதாவின் கேமரா படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது. ராவான லைட்டிங் டோனில் சண்டைக்காட்சிகளும், கார் சேசிங் ஆக்ஷன் காட்சியும் மிரட்டுகிறது. படத்தை விறுவிறுப்பு குறையாமல், அதேசமயம் எந்த குழப்பமும் இல்லாமல் கட் செய்திருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல்.

படம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வசனங்களை மிகவும் குறைத்திருக்கிறார்கள். அதனால் விக்ரம் உண்மையில் யார் என்பதைக்கூட தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை. அதேபோல் நேட்டிவிட்டிக்காக மலாய் மொழியும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் படம் புரியாமல் போகும் நிலையை உருவாக்கியுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சி சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. இரண்டாம் பாதியில் துப்பாக்கி சத்தம் காதைக் கிழிக்கிறது.

விறுவிறுப்பு, பரபரப்பு நிறைந்த ஆக்ஷன் விரும்பிகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தருகிறான் 'கடாரம் கொண்டான்'.

மேலும் பல...

0 comments

Blog Archive