தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள்

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சி...

சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய்கள் பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர்களின் நெருக்கம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் சிறை அதிகாரிகள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளி உலகில் வலம் வருகின்றன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, இங்கு அடைபட்டிருந்தபோது ஏ.சி உள்பட பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சுரங்க முறைகேடு வழக்கில், ரெட்டி சகோதரர்கள் சிறைபட்டிருந்தபோது சர்வசாதாரணமாக வெளியில் சென்று வந்தனர் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி ரூபா நடத்திய திடீர் ஆய்வு சசிகலா உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், “சிறைக்கு வந்த நாள் முதலாக, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் சசிகலா. அவருடன் அடைக்கப்பட்ட இளவரசிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது. சிறையில் பலமுறை மயங்கி விழுந்தார்.

அவருக்குத் தேவையான மருந்துகளை விவேக் கொண்டு வந்து கொடுப்பார். இதுதவிர, வாரத்தில் மூன்று முறை வழக்கறிஞர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசுவது வழக்கம். சிறைக்கு வந்த மறுநாளே, ‘எங்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துக் கொள்கிறோம். அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்' எனக் கேட்டார் சசிகலா. அவருடைய கோரிக்கையை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தோம். அவர்களோ, ‘நாளொன்றுக்கு சிறைக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவை சசிகலா பெயரில் வருகிறது. அந்தக் கடிதங்களை எல்லாம் கர்நாடக தமிழர்கள்தான் எழுதுகிறார்கள். ஜெயலலிதா மரணம் அவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், சசிகலா குடும்பம்தான் என அவர்கள் நம்புகின்றனர்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் உதவும் தகவல் தெரிந்தால், வெளியில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். அரசின் கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். சிறை அமைந்திருக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார் விவேக். பெங்களூரு வரும்போதெல்லாம் அங்குதான் தங்குவார். இந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. சிறைத்துறைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக பெண் அதிகாரி ரூபா பதவியேற்றார். அவர் வந்த பிறகுதான் எங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன" என விவரித்தவர், " கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம். சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை இந்த நபர்தான் செய்துகொடுத்தார். பெங்களூருவுக்குப் பக்கத்திலேயே இருப்பதால், என்ன தேவையென்றாலும் இந்த நபரைத்தான் தொடர்பு கொள்கின்றனர். ‘இப்படியொரு பதவியில் இருந்துகொண்டு சிறைக்கு வரலாமா?' என பன்னீர்செல்வம் அணியினர், இவரைப் பற்றி விமர்சனம் செய்தனர்.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிறை அதிகாரிகள் உதவியோடு சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்தார். டி.ஐ.ஜி ரூபா இதைப் பற்றி விரிவாக விசாரித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தினார். அப்போதுதான் தனி சமையல் அறை விவகாரம் வெளியில் தெரிந்தது. அவரது குடும்பத்தாரோடு தொடர்புகொள்ள, செல்போன் பயன்படுத்துகிறாரா என்றும் தீவிரமாக சோதனை செய்தார் அதிகாரி. என்னென்ன பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படியொரு ரெய்டு நடந்த விவகாரம், டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் தெரியாது. விளக்கம் கேட்டு அவர் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா அளித்த பதில்தான், பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. டி.ஜி.பிக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் முழு விபரங்களும் வெளியாகிவிட்டன. சசிகலாவுக்கு உதவி செய்த வகையில் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். சிறை நன்னடத்தை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட குற்றத்துக்காக, சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த விவகாரத்தில், டி.ஜி.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக.

" இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். ‘தமிழக காங்கிரஸ் பிரமுகர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்கள் சென்றுள்ளன. அதன்படியே சசிகலாவுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன' என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த ரெய்டைத் தொடர்ந்து, பெண் அதிகாரி அனுப்பிய பதிலும் வெளியில் கசிந்துவிட்டது. இதன்மூலம், குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பில்லை. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும்" என்கின்றனர் கர்நாடக அ.தி.மு.கவினர்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் விதித்த கெடுவுக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டங்களுக்கும் மத்திய உளவுத்துறை வைத்த அதிரடிதான் இந்தச் சோதனை. சசிகலா சிறையில் இருக்கும் வரையில், தங்களுக்குத் தேவையானதை தமிழகத்தில் சாதித்துக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறது டெல்லி பா.ஜ.க.

மேலும் பல...

0 comments

Blog Archive