கமல் சொன்னதுலே இன்னா தப்புங்கறேன்? ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்ட கமல் ஹாசனை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி தாகி வருகிறார்கள். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார்...

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்ட கமல் ஹாசனை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி தாகி வருகிறார்கள். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார். இன்னொருவர் கமலை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கமல் ஒழுங்காக வரி கட்டினாரா? என்று சோதனை செய்யப்படும் என்று ஒருவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி செய்பவர்கள் தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவற்றுக்கு விளக்கம் அளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியோ, உண்மையை எடுத்துரைப்பவர்களை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவரைப் பாய்ந்து பிராண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப்பார்க்கிறார்கள். கமல்ஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல்ஹாசன் உள்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.

தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என அனைத்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆர்.கே.நகரில் முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பொறுப்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதும், கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டு குதிரை பேரம் நடந்ததும், குட்கா ஊழலில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்-அமைச்சர் வரை சம்பந்தப்பட்டிருந்ததும் உரிய ஆவணங்கள் மூலம் அம்பலப்பட்டிருப்பதுடன், நீதிமன்றங்களாலும் இந்த அரசாங்கம் பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிறது.

உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை அமைச்சர்களும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வன்மம் கொண்டு அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

இப்படி பேசும் அமைச்சர்களை முதல்-அமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதை விட அடாவடி செயலாகும். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல்ஹாசனின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரலாகும். அதை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள், இந்த ஆட்சி இன்னும் எத்தனை காலம்? என்பதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ளட்டும்”என்று கமலுக்கு சப்போர்ட்டாக ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

இதையடுத்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என தெரிவித்துள்ளார். மேலும்,  அதில்:‛‛ அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’.என கூறி உள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive