யார் இந்த சசிகலா நடராஜன் - திமுக வின் கூட்டாளியா? ஜெ.வுடன் இணைந்தது எப்படி? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சசிகலாவின் கணவரும், புதிய பறவை சிற்றிதழின் நிறுவனருமான நடராஜன் அவர்கள் உறுப்பு தானம் பெற்று நலமாகி...

சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சசிகலாவின் கணவரும், புதிய பறவை சிற்றிதழின் நிறுவனருமான நடராஜன் அவர்கள் உறுப்பு தானம் பெற்று நலமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மீண்டும், சில நாட்களுக்கு முன்னர் இருதய நோய்தொற்று காரணமாக குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜன் இன்று அதிகாலை 01.35 மணியளவில் மரணம் அடைந்துவிட்டார்.

அதிமுக கட்சியில் எம்ஜிஆர்-க்கு பின்பு ஜெ., தலைமை பொறுப்பு வந்ததில் இருந்து, ஜெ - சசிகலா நட்பானது வரை பல முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமானவர் என அறியப்படும் இவர் ஜெ .வாழ்வில் திருப்பம் உண்டாக காரணமாக இருந்தது எப்படி?

திருமணம்

தஞ்சாவூர் அருகாமையில் அமைந்திருக்கும் விளார் என்ற ஊரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கும், திருத்துறைப்பூண்டியை பூர்வீகமாக கொண்ட விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணவேணிக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்த சசிகலா இருவருக்கும் 1970ஆம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடந்தது.
வேலை

நடராஜன் அவர்கள் தென்னாற்காடு பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

அவருக்கு இந்த வேலையை கலைஞர் அவர்கள் ஏற்பாடு செய்துக் கொடுத்ததாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

(1967ல் திமுக ஆட்சியில் இருந்த போதுதான், நடராஜன் அவர்களுக்கு இந்த வேலை கிட்டியது என்று அறியப்படுகிறது)
வினோத் வீடியோ விஷன்

திருமணத்திற்கு பின்பு சில காலம் கழித்து சென்னைக்கு பணியிடம் மாற்றமாகி வருகிறார்கள் நடராஜன் - சசிகலா. அப்போது தான் சென்னையில் தனது மனைவிக்கு வினோத் வீடியோ விஷன் என்ற பெயரில் ஒரு வீடியோ கேசட் கடை அமைத்துத் தருகிறார் நடராசன்.
கலெக்டர். சந்திரலேகா

இந்த காலக்கட்டத்தில் தான் கலெக்டராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் அவர்கள் மூலம் ஜெயலலிதாவுடன் அறிமுகம் கிடைக்கிறது நடராஜனுக்கு. 1982ல் எம்.ஜி.ஆரால் ஜெயலலிதா அவர்கள் கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார்.

அப்போது ஜெயலலிதா மேற்கொள்ளும் பயணங்களை, மேடைப் பேச்சுகளை படம்பிடித்து தரும் வாய்ப்பு வினோத் வீடியோ விஷனுக்கு வருகிறது.

நட்பு

இப்படியாக தான் முதன் முறையாக, ஜெ.,வின் ஒரு சுற்றுப்பயணத்தின் வீடியோ கேசட்டை கொடுப்பதற்காக ஜெயலலிதாவை நேரில் காண வேதா நிலையம் இல்லத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு ஒருமுறை உடல்நலம் குறைபாடு ஏற்பட்டு சில நாள் பெங்களூரு செல்ல, அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து பணிவிடை செய்தார் சசிகலா என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையேயான நட்புறவு வலுவாகிறது.
முக்கிய காரணமா?

1984-85ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அப்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்ஜிஆர் அவர்களும் உடல்நல குறைபாட்டில் இருந்தார். ஜெயலலிதா அவர்கள் அடுத்த தலைவராக வரவேண்டும் என்பது ஆலோசனை வழங்கியவர்களில் நடராஜன் அவர்களும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் மரணம்

எம்ஜிஆர் இறந்த போது ஜெயலலிதாவுக்கு கட்சியை சேர்ந்த பலர் மன உளைச்சல்கள் ஏற்படுத்தினர். இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள இருந்த ஜெயலலிதாவை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அவமானப்படுத்தினார்கள். அந்த காலத்தில் கலங்கிய ஜெயலலிதாவுக்கு அரவணைப்பாக சசிகலா இருந்தார். இதுப் போல பல சூழல்கள் இவர்களது நட்பை வலுவாக்கியது.
பிரிவு

ஒரு தருணத்தில் நடராஜன் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அனைத்து ஆலோசனைகளும் வழங்குவது நான் தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஜெயலலிதாவின் செவிகளை எட்ட, சசிகலாவுக்கு கணவரா - நட்பா? என்ற கேள்வி எழுகிறது. எப்படியும் ஜெயலலிதா நடராஜன் அவர்களை தனது வட்டத்தில் இருந்து நீக்கிவிடுவார் என்பதை சசிகலா அறிந்திருந்தார். ஆகவே, கணவரை பிரிந்து, நட்பு தான் முக்கியம் என வேதா இல்லத்தில் தஞ்சம் புகுந்தார் சசிகலா.

ஜெயலலிதா முதல்வர்

சட்டமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஜெ., அடுத்த முறை சட்டமன்றத்திற்குள் முதல்வராக தான் வருவேன் என்று சப்தம் ஏற்கிறார். அதே போல 1991 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வர் அரியணை ஏறினார்.
ஆட்டம் ஆரம்பம்

கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு அனைத்துமே நான் தான் என்கிறது போல கட்சிக்குள் உருவெடுக்கிறார் சசிகலா. ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடன் செல்கிறார். கோவில், அரசு விழாக்கள் என ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது நிழலாக பின்தொடர்கிறார். இப்போது தான் மன்னார்குடி கூட்டத்தின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.
சுதாகரன் திருமணம்

குழந்தைகள் இல்லாத ஜெயலலிதா, சசிகலாவின் சகோதரி மகனான சுதாகரனை தத்தெடுத்து, அவருக்கு இந்தியாவே ஆச்சரியப்படும் அளவிற்கு ஆடம்பர திருமணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதா, சசிகலா இருவரும் தங்கத்தில் ஜொலித்தனர்.

இதன் பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் சொத்துகுவிப்பு வழக்குகளுக்கு பிறகே இனிமேல், நான் நகை அணிய மாட்டேன் என்ற வாக்குறுதி எடுக்கிறார் ஜெயலலிதா. அதே போல, அதன் பிறகு பெரும்பாலும் பச்சை நிற புடவை மற்றும் கொண்டையிட்ட சிகை அலங்காரத்துடனான தோற்றத்திற்கு மாறினார் ஜெயலலிதா.

வாய்ஸ் கொடுத்த ரஜினி

ஜெயலலிதாவின் பெயரை வைத்து பல மோசடிகள், சொத்துக் குவிப்புகள், அராஜகங்கள் அரங்கேறின. பலதரப்பட்ட மக்கள் ஜெயலலிதாவின் முதல் ஆட்சியில் கலங்கினர்.

அப்போது தான் ஜெயலலிதா மூலம் இன்னல்களுக்கு உண்டான ரஜினி அவர்கள் இந்த ஆட்சி இனி தொடர்ந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனும் காப்பாற்ற முடியாது என்று வாய்ஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். வரலாறு காணாத படுதோல்வி காண்கிறார் ஜெயலலிதா.

கடிதம்

சற்றும் எதிர்பாராத அந்த வரலாற்று தோல்விக்கு காரணம் என்ன, என் மீது, என் ஆட்சி மீது நீங்கள் கண்ட குறை என்னவென்று கட்சி ஆட்களிடம் கடிதம் வாயிலாக பதில் கேட்கிறார் ஜெயலலிதா. பெரும்பாலான முக்கிய உறுப்பினர்கள் சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தை கைக்காட்ட, சசிகலா வேதா இல்லத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார். ஆனால், சிறிது காலம் கழித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்துவிடுகிறார் சசி.
டிஜிபி இராமானுஜம்

2011ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மன்னார்குடி குடும்பம் 1991ல் செய்த அதே வேலைகளை மீண்டும் செய்கிறது. இதை டிஜிபி இராமானுஜம் அவர்கள் ஜெயலலிதாவின் காதுகளுக்கு எடுத்துச்செல்ல மீண்டும் வெளிற்றப்படுகிறார் சசிகலா.
அறிக்கை

வெளியேற்றப்பட்ட பிறகு, மிக சோகமாகவும், ஜெயலலிதாவின் மீது அக்கறை கொண்டபவராகவும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார் சசிகலா. அதில், தனக்கு இதில் எந்த சம்மந்தம் இல்லை என்றும், நான் ஜெவுடன் இருப்பதை அறிந்து எனது உறவினர்கள் சிலர் தான் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், அவர்களை கண்டறிந்து தக்க தண்டனை வாங்கித் தருவேன். நான் ஜெயலலிதாவின் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டுள்ளேன் என வருத்ததுடன் வெளிவருகிறது சசிகலாவின் அறிக்கை. பிறகு, ஜெயலலிதாவால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார் சசிகலா.
க்ளைமேக்ஸ்

    பிறகு என்ன நடந்தது என்று ஊர் அறிந்த விஷயம்.

    சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெயலலிதா சிறை தண்டனை - நீதிபதி குமாரசாமி - ஜெயலலிதா விடுதலை - மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா - திடீர் உடல்நல கோளாறு - 75 நாட்கள் நாடகம் - ஜெயலலிதா மரணம் - சின்னம்மா அரிதாரம் - கட்சிக்குள் சலசலப்பு - பன்னீர்செல்வம் பதவிப்பறிப்பு - தியானம் - மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு - சிறை தண்டனை பெறுகிறார் சசிகலா - இன்று கணவர் நடராஜன் மரணம் அடைய பரோலில் வெளிவருகிறார் சசிகலா.

மேலும் பல...

0 comments

Blog Archive