அனுபவம்
சினிமா
திரைவிமர்சனம்
காலா - நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'.
June 07, 2018
நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'.
தாராவி பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு சொகுசான கட்டிடங்கள் கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறது ஒரு கார்ப்பரேட் கும்பல். அதற்கும் சிலர் இணங்க, அதன் ஆபத்தை அறிந்து முட்டுக்கட்டை போடுகிறார் ரஜினி. இதனால் எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவிய சம்பத் சில வில்லங்க வேலைகளைச் செய்ய எந்தத் தப்பும் செய்யாத ஓர் இளைஞனின் உயிர் பறிபோகிறது. ரஜினி இதற்கான விலையாக சம்பத்துக்கு பெரும் தண்டனையை அளிக்கிறார். இந்த சூழலில் தாராவியைக் கைப்பற்றத் துடிக்கும் கார்ப்பரேட் மூளையாக இருக்கும் நானா படேகர் ரஜினியை சந்தித்து எச்சரிக்கிறார். அந்த மோதல் வலுக்க, ஒரு பிடி மண் கூட இந்த தாராவி மண்ணில் இருந்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்று ரஜினி சவால் விடுகிறார். இதனிடையே ரஜினியைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதில் தாராவி என்ன ஆனது, நானா படேகரின் கனவு நனவாகிறதா, ரஜினி என்ன ஆகிறார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
தலித் அரசியல், சுவர் அரசியல், புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித் இதில் நிலம் சார் அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். துணிச்சலான அவரது முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், படம் ஆவணப்படத்துக்கான அம்சங்களுடனேயே இருப்பது அலுப்பைத் தருகிறது.
கமர்ஷியல் படம் என்றாலும் அதில் ரஜினி மாஸ் நடிகர் என்பதைக் காட்டிலும் ஃபெர்பாமன்ஸ் நடிகர் என்பதை இரஞ்சித் முன்னிலைப்படுத்து திரையில் வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. ஸ்டைலிஷ் ரஜினி படம் முழுக்க வசீகரிக்கிறார். உடல் மொழியிலும், பழைய காதலின் கதகதப்பை கண்களிலேயே காட்டும் நடிப்பிலும் அசர வைக்கிறார். 'என்னைக் கேட்காம நீ வந்துட்ட, என் பெர்மிஷன் இல்லாம நீ போக முடியாது' என்று நானா படேகருக்கு தாராவியின் சூழலை உணர்த்தும்போதும், யாரு இவரு என காவல் நிலையத்தில் ரிப்பீட்டாகக் கேட்டு பதிலடி கொடுக்கும்போதும் 'நான் நடிகன்டா' என்பதை நிரூபிக்கிறார்.
ஈஸ்வரி ராவ் இயல்பான நடிப்பை அள்ளி வழங்கி இருக்கிறார். 'நீங்க மட்டும்தான் உங்க முன்னாள் காதலியைப் பார்த்துட்டு வருவீங்களா? இப்போ திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. என்னைக் காதலிச்ச பெருமாளை நான் போய் பார்த்துட்டு வர்றேன்' என்று ரஜினியிடம் ஊடல் கொள்ளும் காட்சிகளிலும், ரஜினி மீதான காதலையும், மகன்கள் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
சமுத்திரக்கனி படம் முழுக்க முக்கிய வரும் முக்கியக் கதாபாத்திரத்தில் அதகளப்படுத்தி இருக்கிறார். படத்தின் நகைச்சுவைக்கு கனியே காரணம். இடையிடையே அவர் பேசும் வசனங்களால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.
ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பால் நானா படேகர் கவனத்தை ஈர்க்கிறார். ரஜினியுடன் பேசும் காட்சியில் அவரைத் தாண்டியும் வசனத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்.
ரஜினியின் மகனாக விழித்தெழு இயக்கத்தின் தோழராக வரும் மணிகண்டனின் நடிப்பு செம்ம. இவருக்கு பிரகாசமான வாய்ப்பு வெளிச்சம் இனிவரும் காலங்களில் கிடைக்கும் என நம்பலாம். திலீபன் கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ரஜினியின் தளபதியாகவே மாறியிருக்கிறார்.
தைரியமான பெண்ணாக உரிமைக்குரல் எழுப்பும் அஞ்சலி பாட்டீல், முன்னாள் காதலியாக மனதில் அன்பைச் சுமக்கும் ஹீமா குரேஷி, போலீஸாக வரும் அரவிந்த் ஆகாஷ், கலவரத்தைத் தூண்டிவிடும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
சம்பத் ராம், அருள்தாஸ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் படத்தில் வந்து போயிருக்கிறார்கள்.
முரளியின் கேமரா தாராவியின் ஒட்டுமொத்த அழகையும் சூழலையும் கண்களுக்குள் கடத்துகிறது. ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், குடிசைப் பகுதிகள் என எல்லாவற்றிலும் முரளியின் உழைப்பு பளிச்சிடுகிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தி பெஸ்ட் கொடுத்திருக்கிறார். கண்ணம்மா பாடலில் காதலின் மகோன்னத்தை இசைத்தவர் கற்றவை பற்றவை பாடலில் போராட்ட உணர்வைப் பாய்ச்சுகிறார்.
நீட்டி முழக்க வேண்டிய காட்சிகளை கத்தரி போட்டு கச்சிதமாகக் கொடுத்த விதத்தில் ஸ்ரீகர் பிரசாத்தின் பங்கு அளப்பரியது. தாராவி பகுதியை அச்சு அசலாகக் காட்டியதில் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பணி பாராட்டுக்குரியது. மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, பா.இரஞ்சித்தின் வசனங்கள் படம் சார்ந்த அரசியலை மட்டும் நேர்மையாகவும் உண்மையாகவும் பேசுகின்றன.
குடும்பம், அரசியல் என எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என முதல் பாதியில் இரஞ்சித் குழம்பியிருக்கிறார். அந்தக் குழப்பம் காட்சிகளின் இழுவையாக எதிரொலிக்கிறது. படத்தில் 'மெட்ராஸ்', 'கபாலி' என அவரது முந்தைய படங்களின் சாயல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 'மெட்ராஸ்' படத்தில் சுவரில் பெயிண்ட்டைத் தூக்கி வீசுவார்கள். 'காலா'வில் வெண்மையையே ஆடையாகக் கொண்டு அதுதான் தூய்மை என்று இருக்கும் நபர் மீது கலர் சாயங்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.
'கபாலி'யில் ரஜினி தன் மனைவியைத் தேடி வருவார். 'காலா'வில் ஹீமா குரேஷி தன் முன்னாள் காதலனைப் பார்க்க வருகிறார். அவர் வருவதற்கான நோக்கம் வெறொன்றாக இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. 'மெட்ராஸ்' படத்தில் வருவதைப் போல இதிலும் கானா பாடல் பாடி, திடீரென்று டான்ஸ் ஆடி கவனம் ஈர்க்கும் ஹிப்- ஹாப் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது 'காலா'வில் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது.
படத்தின் முக்கியமான காட்சிகளில் ரஜினி நடந்துகொண்டே இருப்பதும், ஸ்லோமோஷன் காட்சிகளின் பில்டப்பும் படத்தின் தீவிரத் தன்மையக் குறைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் பில்டப் காட்சிகள் முழுமையடையாமல் தொக்கி நிற்கிறது. எந்த இடத்திலும், காட்சியிலும் நாயகனின் புத்திசாலித்தனமோ, ஒப்புயர்வில்லாத வீரமோ வெளிப்படவே இல்லை. 'வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன், மொத்தமா வாங்கலே' என்று ரஜினி மாஸ் பன்ச் வசனம் பேசுகிறார். ஆனால், அதற்குப் பிறகான காட்சியில் அவருக்கு முக்கியத்துவமே இல்லாமல் போகிறது.
ரஜினி- நானா படேகருக்கான மோதலோ, எதிர்ப்போ, உரசலோ வலுவாக இல்லை. குடும்பத்தின் இரு ஜீவன்களை இழந்த பிறகும் ரஜினி எந்த வித எதிர்ப்பையும் இல்லாமல் சாதாரணமாகவே பேசிவிட்டுச் செல்வது நம்பும்படியாக இல்லை. படத்தின் மையப் புள்ளியான தாராவிக்கும் ரஜினிக்குமான உறவும், பிணைப்பும் சொல்லப்பட்ட விதத்தில் போதாமையே மிஞ்சுகிறது.
சுத்தம் - தூய்மையை ஆதரிக்கும் திட்டங்கள், அதை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று கட்டமைக்கப்படும் அரசியல், ராம காதை, ராவண காவியம், ராவணன் தலை துண்டிக்கப்பட்டால் ஆயிரம் தலைகள் முளைக்கும் என்று சொல்லப்படும் கதாகாலட்சேபம், பெரியார் சிலை என இரஞ்சித் சொல்லியிருக்கும் குறியீடு சார் அரசியல் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது நம்பகத்தன்மையோடும் ஏற்புடையதாகவும் உள்ளது. கல்விதான் முக்கியம் என்று ரஞ்சித் படத்தில் முன்னெடுக்கும் இயக்கத்தின் மாற்று வடிவமும் வரவேற்கத்தக்கது.
0 comments