கீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா?

இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரிய...


இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரியாத, இயற்கையை இயற்கையாக விடத் தெரியாத நம்மால் இயற்கைப் பல பேரிடர்களை சந்தித்து வருகிறது. இருந்தாலும் இயற்கை ஒரு தாய் போல் இருந்து நம்மை அரவணைக்கவே செய்கிறது. பல அற்புதங்களை ஒரு கைத்தேர்ந்த மேஜிக் மேன் போல நம் கண்முன்னே அனுதினமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இயற்கை படைத்த ஏரழிஞ்சில் மரமும் நமக்குப் பல அதிசயங்களை வெளிப்படுத்தும் ஓர் அதிசயம்தான். இந்த மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் தானாக நகர்ந்து போய் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் அதிசயத்தை நிகழ்த்துபவை. நமது உடம்பை நீண்டகாலம் வாழ வைக்கக்கூடிய காயகற்பத்தை தரவல்லவை.

கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியின் மேற்கு பகுதியில் தொடங்கி கேரளாவின் பாலக்காடு வரை தெற்கு வடக்காக இந்த மரங்கள் பரவலாக வளர்கின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இந்த மரங்கள் இருக்கின்றன. இந்த மரத்தின் பால் நம் உடம்பில் பட்டுவிட்டால்,அது புண்ணாகி நான்கு மாதங்கள் வரை ஆறாது என்பது ஒரு பிரச்னை. ஆனால் நன்மைகள் ஏராளம். இந்த மரத்தின் அருமை தெரிந்து, ஏரழிஞ்சில் மரத்தின் விதைகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் ஊன்றி வைத்திருக்கும் கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரனிடம் பேசினோம்.

 விவசாயி மனோகரன்``இந்த மரத்தின் தன்மைகளை பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாயிட்டு. இந்த ஏரழிஞ்சில் மரத்திலிருந்து கீழே தரையில் விழும் விதைகள் தானாக நகர்ந்து போய், மரத்தில் ஏறி,அடிமரத்தில் ஒட்டிக்கொள்ளுமாம். ஏற்கெனவே,கரூர் மாவட்டத்தில் உள்ள எனது வேட்டையார்பாளையம் இயற்கை வேளாண்மைத் தோட்டத்தில் ஆப்பிள்,திருவோட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வர்றேன். `ஆப்பிள், திருவோட்டு மரங்கள் கரூர் மாவட்டத்து சீதோஷ்ண நிலைக்கு வளராது'ன்னு பலரும் சொன்னாங்க. நான் வளர்த்துக் காட்டுறேன்னு சொல்லி வாங்கி வந்து நட்டு வளர்த்துக் காட்டிட்டேன். அதேபோல்தான், `இந்த ஏரழிஞ்சில் மரத்தையும் இங்கே வளர்க்க முடியாது'ன்னு சொன்னாங்க. `அதையும் நான் வளர்த்துக் காட்டுறேன்'ன்னு சொல்லி பத்து விதைகளை பழனி ஸ்ரீவாலாம்பிகை அறக்கட்டளை செம்மலர் சித்தா மையத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வராஜ்கிட்ட வாங்கிட்டு வந்து, என் தோட்டத்தில் அங்கங்கே நட்டு வைத்திருக்கிறேன். நிச்சயமா அத்தனை விதைகளையும் மரமாக்கி காட்டுவேன்" என்றார்.

 ஏரழிஞ்சில் மரத்தின் தன்மைகள், மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் செல்வராஜிடமே பேசினோம்.செல்வராஜ்
``இயற்கையின் படைப்பில் ஏரழிஞ்சில் மரம் ஒரு வரப்பிரசாதம். எனது வீடு, கன்னிவாடி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் பக்கம்ன்னு நான் பார்த்த வரையில் அங்கங்கே ஒவ்வொரு மரம் இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மாந்திரீக மை, வசிய மை தயாரிக்கிறார்கள். மாந்திரீக நாட்டம் உடையவர்கள் இந்த மரங்களைத் தேடி அலைவார்கள். ஏனென்றால்,மாந்திரீக வேலைகளில் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மை ராஜ மையாகப் பயன்படுத்தப்படுகிறதாம். அதோடு, இந்த மரத்தின் விதைகளோடு,இன்னும் சில விதைகளைச் சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இந்தக் காயகற்பத்தை சாப்பிட்டால், நம் உடல் நீண்டகாலம் நலமாக இருக்கும். தொடர்ந்து இந்தக் காயகற்பத்தைச் சாப்பிட்டு வந்தால், அதிக வயது வரை நாம் உயிர் வாழலாம் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த மரத்தின் இலைகள், மரப்பட்டைகளை எடுத்து அரைத்துப் பவுடராக்கி உண்டு வந்தாலும், நம் உடம்பில் உள்ள சகலப் பிரச்னைகளும் நீங்கி நாம் அதிகநாள்கள் உயிர் வாழலாம். இந்த ஏரழிஞ்சில் சின்னக் கன்றாக இருக்கும்போதே மரத்தில் பழம் பழுக்கும். பெரிய சைஸ் மரமாக வளரும். இந்த மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிட்டு, கீழே போட்டால், அது மரமாகும்.

 ஆனால், ஏரழிஞ்சில் மரத்திலிருந்து தானாக கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் முளைக்காது. பழங்கள் கீழே விழுந்த மூன்று நாள்களில் அந்தப் பழத்தில் உள்ள விதைகள் தானாக நகர்ந்து போய், ஏரழிஞ்சில் மரத்தில் ஏறி அடிமரங்களில் ஆங்காங்கே ஒட்டிக் கொள்ளும். அது எப்படின்னா, மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகளுக்குள் குறிப்பிட்ட ஒரு பூச்சியினத்தின் புழுக்கள் உள்ளே போயிரும். அந்தப் புழு ஏரழிஞ்சில் விதைகளை நகர்த்திக் கொண்டு போய் மரத்தில் ஏற்றி, அடிமரங்களில் ஒட்ட வைக்கும். பிறகு கூட்டுப்புழுக்கள் போய் இருந்துவிட்டு, பின்பு மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளிலிருந்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறி பறந்து போய்விடும். அந்த விதைகள் மட்டும் ஏரழிஞ்சில் மரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். நாளடவையில் அந்த விதைகள் வெறும் விதைக் கூடுகளாக மாறி, மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இப்படி அதிசயங்களும், அற்புத மருத்துவக் குணங்களையும் கொண்ட இந்த ஏரழிஞ்சில் மரத்தை எல்லா இடங்களில் பயிர் செய்யவேண்டும்" என்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive