ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? பாரதிராஜா காட்டம்!

தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது....



தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது.  தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளவர் ரவிச்சந்திரன். இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே ரவிச்சந்திரன் “இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூலை எழுதியுள்ளார். இந்த நூலை நளினியின் சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் தி.திருமுருகன் வரவேற்றார். புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:

தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது. தமிழகத்தில் ஒற்றுமையில்லாததால் பிரிவினை சக்திகள் பின்வாசல் வழியாக நுழைய பார்க்கின்றன. தமிழர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை விட்டு தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டால் எந்த சக்தியாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் பயணிப்பதாக கூறும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இந்த 7 பேரையும் விடுதலை செய்யட்டும், நான் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயார். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பியூஸ்  போன பல்ப்புகள். மத்திய அரசு என்ற பல்ப்பின் வெளிச்சத்தின் கீழ் இருப்பதால் இரண்டு பல்ப்புகளும் எரிவது போல் தெரிகிறது.

இப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்பப்போவதாக பலரும் கூறி வரு கின்றனர். இப்போது வெற்றிடம் இல்லை. ரஜினி, கமல் நல்லவர்கள். இவர்கள் கட்சி தொடங்கு வதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது 25 ஆண்டுக்கு முன்பு எம்ஜிஆர் இறந்த போது வெற்றிடம் ஏற்பட்டது. வேதம்புதிது படம் ரிலீஸ் ஆன நேரம். அப்போது ரஜினி, கமலை நான் அரசியலுக்கு வரச் சொன்னேன். மறுத்து விட்டனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம். ஆனால், தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குபவர்களாகவும், மந்திரிகளை உருவாக்குபவர்களாகவும் இருக்கலாம். தலைமை பொறுப்புக்கு வர ஆசைப்படக்கூடாது.

கர்நாடாவுக்கு எதிராக எதையாவது பேச முடியுமா? தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் பெயரை தமிழ் திரையுல நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என மாற்ற முடியுமா? எவ்வளவு கேவலம் தெரியுமா? காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ் திரையுலகத்தினர் நடத்திய நெய்வேலி போராட்டத்துக்கு ரஜினி வரவில்லை. கமல் ஊர்வலத்துக்கு வந்தார். ரஜினி எனது நண்பர் தான். நட்பு ரீதியில் ரஜினி அற்புதமான மனிதர். ஆனால் நட்பு என்பது வேறு. கொள்கை என்பது வேறு. நெய்வேலி போராட்டத்துக்கு நடிகர்கள் செல்லக்கூடாது என்றார். நாங்கள் நெய்வேலியில் போராடிக் கொண்டிருந்த போது அவர் மட்டும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலி போராட்டத்துக்கு வராமல் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்த உங்களை (ரஜினி) நம்பி எப்படி தமிழ்நாட்டை ஒப்படைப்பது?

காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று சொல்லுங்கள், இல்லை காவிரி நீரில் தமிழகத்துக்கு பங்கு உண்டு என ஒற்றை வார்த்தை கூறுங்கள் பார்க்கலாம். தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. ஒற்றுமையாக இருந்து இதை முறியடிக்கணும். ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? தமிழகத்தின் நிலப்பரப்பு சரியாக தெரியாது. தமிழகத்தில் எவ்வளவு நதி, அணைகள் உள்ளது எனத் தெரியாது. தமிழத்தின் வரலாறு தெரியாது. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கெட்டு குட்டிச்சுவராகி போனோம். குஷ்புக்கு கோயில் கட்டுகிறார்கள் முட்டாள்கள். எனவே விழித்தெழு, விழித்தெழப்பார். ஒற்றுமையாக இருந்து சதிகளை முறியடிப்போம்.” என்று பாரதிராஜா பேசினார்.

இயக்குநர் அமீர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலர் வன்னி அரசு, விசிக மாவட்டச் செயலர் எல்லாளன், நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலர் வெற்றிகுமரன். நூலின் தொகுப்பாசிரியர் பா.ஏகலைவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive