ராட்சசன் - திரைவிமர்சனம்-உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும்

தமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமா...

தமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ராட்சசன், இதுவும் மக்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஷ்ணு பெரிய இயக்குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சைக்கோ படமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றார். இதற்காக உலகில் உள்ள அனைத்து சைக்கோக்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கின்றார்.

அந்த சமயத்தில் போலிஸாக இருந்த அவருடைய அப்பா இறக்க, போலிஸ் வேலை இவரை தேடி வருகின்றது. அவரும் குடும்ப வறுமை காரணமாக அந்த வேலையில் சேர்கின்றார்.

சென்னையில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர், இவை தமிழக காவல் துறைக்கு பெரும் தலை வலியாக இருக்க, விஷ்ணு சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்த கேஸிற்கு உதவ, அதன் பின் இந்த சைக்கோவை தேடி அலையும் விஷ்ணு எப்படி அவனை கண்டுப்பிடிக்கின்றார் என்பதை சீட்டின் நுனிக்கு வர வைத்து காட்டியுள்ளனர்.

படத்தை பற்றிய அலசல்

முதலில் விஷ்ணுவிற்கு தான் பாராட்டு, வெறுமென கமர்ஷியல் மசாலாவில் மாட்டாமல், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, ராட்சசன் என வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகின்றார். இதுவரை நடித்ததில் விஷ்ணுவின் பெஸ்ட் ராட்சசன என்று சொல்லிவிடலாம்.

அவரை தாண்டி முனிஷ்காந்த், அட முண்டாசுப்பட்டியில் காமெடியில் கலக்கியவரா இவர், எமோஷ்னல் காட்சியில் கலங்க வைக்கின்றாரே என ஆச்சரியப்பட வைக்கின்றார். ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியமே அடுத்து என்ன, யார் இதை செய்கின்றார்கள் என்பதை மக்களிடம் பதிய வைப்பது தான்.

படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தான், ஆனால் ஒரு காட்சியில் கூட உங்களை சோர்வாக்காது, பரபரப்பிலேயே உங்களை கட்டிப்போட்டு இருக்கும். அதிலும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை எப்படி தன் ஆசைக்கு இணங்க வைக்கின்றார் என்ற காட்சிகளை காட்டிய விதம் எல்லாம், கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு தான், நமக்கே அவரை அடிக்க வேண்டும் என்ற உணர்வை இயக்குனர் கடத்தி செல்கின்றார்.

ஒரு சைக்கோ, பழிவாங்கும் கதை என்றாலே ப்ளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இது தேவையில்லை என்றாலும், தமிழுக்கு இவை மிகவும் முக்கியம் தான், அந்த விதத்தில் சைக்கோவிற்காக ப்ளாஷ்பேக் காட்சிகள் மிக அழுத்தமாக உள்ளது.

ஆனால், கொஞ்சம் கொரியன் படமான மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்துகின்றது, அதை தவிர்க்க முடியவில்லை ராம்குமார். அதிலும் குறிப்பாக அந்த ரோடியோவில் இசையை வைத்து சைக்கோ கொலைக்காரனை கண்டுபிடிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள், கொஞ்சம் மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்தினாலும், மற்றபடி இது பெஸ்ட் சைக்கோ த்ரில்லர் டாப் லிஸ்டில் இடம்பெறும்.

படத்தின் ரியல் ஹீரோ ஜிப்ரான் தான், காட்சிக்கு காட்சி தன் இசையால் நம்முள் பதட்டத்தை கொண்டு செல்கின்றார். ஒளிப்பதிவாளர் ஷங்கரின் ஒளிப்பதிவு நம்மையும் கூடவே அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு நொடி கூட நம் கவனத்தை திசை திருப்பவில்லை.

படத்தில் வரும் சைக்கோ கொலைக்காரனுக்கான அழுத்தமான ப்ளேஷ்பேக் காட்சிகள். பல இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றார்.

ஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படம் போல் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஷ்ணு தூக்கத்திலிருந்து எழும் காட்சி, ஏதோ துப்பாக்கியில் சுடுவது போல் வந்து உடனே எழுவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதிது.

ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள். கிளைமேக்ஸ் ஸ்டெண்ட் சூப்பர்.

பல்ப்ஸ்

சைக்கோ கொலைக்காரனை ஊர் போலிஸே தேடுகின்றது, அவரும் ரன்னிங்கில் இருப்பார் என்று பார்த்தால் அந்த பதட்டத்தில் அவருக்கு எப்படி விஷ்ணுவின் காதலி(அமலா பால்) வீடு, அவருக்கு உதவி செய்யும் ராதாரவி வீட்டையெல்லாம் கண்டுபிடித்து கொல்ல வருகின்றார் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை அடைய கண்டிப்பாக இந்த ராட்சசனை விசிட் அடிக்கலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive