``கமலுக்கு லைவ் செய்கிறார்கள்; எங்கள கண்டுக்கல'' - அன்புமணி ஆதங்கம்!

விவசாயிகள் பல துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்களிடம்கூட லஞ்சம் வாங்குகிறார்கள் அதிகாரிகள். இந்த நேரத்தில் இலவசமாக ...

விவசாயிகள் பல துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்களிடம்கூட லஞ்சம் வாங்குகிறார்கள் அதிகாரிகள். இந்த நேரத்தில் இலவசமாக ஸ்கூட்டி தருகிறார்கள் அதற்கு பெட்ரோல் யார் தருவார்கள் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தஞ்சாவூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், "காவிரி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்துக்கு அநீதி நடந்திருக்கிறது. காவிரி பிரச்னையில் இதுவரை தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய நீரில் மொத்தம் 170 டி.எம்.சி குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி. இதற்கு முழு காரணம் திராவிடக் கட்சிகள்தான். 1969-ம் ஆண்டு கர்நாடகாவில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே நான்கு அணைகள் கட்டினர். அப்போதைய முதல்வரான கருணாநிதி அதைத் தடுக்கத் தவறிவிட்டார்.

இந்தத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஒன்று மட்டுமே தமிழகத்துக்கான நல்லது. இதை மத்திய அரசு அமைக்குமா என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இதை மார்ச் 29-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும். இது சாதாரண போராட்டமாக இருக்காது. இதுவரைக்கும் தமிழகத்தில் நடக்காத போராட்டமாக இருக்கும். எங்கள் பாணியில் போராட்டங்களை நடத்துவோம். அதற்கு இளைஞர்களே... என் தம்பிகளே வாருங்கள்.
 
ஒரு கவுன்சிலர் பதவிக்குத் தகுதியில்லாதவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு நிர்வாகம் மக்கள் பிரச்னைகளைப் பற்றி  என்னவென்றே தெரியாது. இவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் அலுவலகத்துக்கு இன்றைக்கு வருவதே எவ்வளவு கல்லா கட்டலாம் என்பதற்காகத்தான். விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் இதுவரை 30,000 கோடி கடனை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். ஆனால், 30,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளிடம் கடனை வசூலிப்பதற்காகக் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். விவசாயிகளிடம்கூட லஞ்சம் வாங்குகிறார்கள் அதிகாரிகள். இது எவ்வளவு பெரிய வேதனை. விவசாயிகள் பல துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் பிரதமரை அழைத்து வந்து இலவசமாக ஸ்கூட்டி கொடுக்கிறார்கள். அதற்கு பெட்ரோல் யார் கொடுப்பார்கள்.

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் இலவசமாகப் பொருள்கள் எதையும் தர மாட்டோம். அதற்கு மாறாகத் தரமான கல்வி இலவசமாகத் தருவோம். அதற்கான திட்டங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்கு ஒரே ஓர் ஐந்தாண்டு மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள் தமிழகத்தை எப்படி மாற்றுகிறோம் என்று. நாங்கள் பல ஆய்வுகளை நடத்தி வேளாண்மைத் துறைக்கு நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறோம். அதில் பல நல்ல திட்டங்கள் சொல்லப்பட்டிருகிறது. ஊடகங்களுக்கு அவை எல்லாம் ஒரு செய்தியே கிடையாது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு கட்சித் தொடங்கினார் நடிகர் கமல். ராமேஸ்வரத்தில் தொடங்கி மதுரையில் நடந்த கூட்டம் வரை நான்கு மணி நேரத்துக்கும் மேலாகத் தொலைக்காட்சியில் லைவ் செய்கிறார்கள். மக்களே நடிகர்களைவிட்டு வெளியே வாருங்கள். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்" என்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive