நாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹீரோக்களில் தளபதியும் ஒருவர். இவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். படம் மட்டுமில்ல...

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹீரோக்களில் தளபதியும் ஒருவர். இவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். படம் மட்டுமில்ல, பிறந்தநாளும் தான். ஆம், வரும் 22ம் தேதி 45 வயது முடிந்து 46ஆவது வயதில் அடியெடுத்து வருகிறார். இதனை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு தளபதி63 ஆவது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகிறது. 22ம் தேதி நள்ளிரவில் 2ஆவது லுக் போஸ்டர் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை 62 படங்களில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய்யின் நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்…

நாளைய தீர்ப்பு

தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நாளைய தீர்ப்பு. இப்படத்தில் நடிக்கும் போது விஜய்க்கு வயது 18. இந்தப் படத்தை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார். இப்படி குடும்பமே ஒரு படத்தில் பணியாற்றியது என்றால், அது இந்தப் படம் தான். ஆனால், இந்தப் படம் வணீக ரீதியாக தோல்வியை தழுவியது.

செந்தூரபாண்டி

விஜய்க்கு ஹிட் கொடுத்த படம் என்றால் அது காதல் கதையை மையப்படுத்திய செந்தூரபாண்டி படம் தான். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படத்தில், விஜயகாந்த், கௌதமி, யுவராணி, மனோரமா, பொன்னம்பலம், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இது விஜய் ஹீரோவாக நடித்த 2ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ம் ஆண்டு வெளியான இப்படம் 2007ல் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தாகூர் பவானி சிங் என்ற டைட்டிலில் வெளியானது.

பூவே உனக்காக – சில்வர் ஜூபிலி (250 நாட்கள்)

விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்த படங்களில் பூவே உனக்காக படமும் ஒன்று. காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட படம் என்றே சொல்லலாம். விக்ரமன் இயக்கத்தில் வந்த இப்படத்தில், விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நம்பியார், சிஆர் விஜயகுமாரி, நாகேஷ், மலேசியா வாசுதேவன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 250 நாட்கள் வரை திரையரங்கில் வெற்றி கொடுத்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை கொட்டியது. இப்படம் விஜய்யின் வரலாற்றில் சில்வர் ஜூபிலி படமாக அமைந்தது.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.

கிளைமேக்ஸ் சீன் டயலாக்ஸ்:

நான் லவ் பண்ணுணதே காதலித்த பொண்ணுக்கு தெரியாது. தோல்வியடைவதற்கு காதல் ஒன்னும் பரீட்சை இல்லைங்க. அது ஒரு பீலிங். அந்த பீலிங் ஒரு முறை வந்துவிட்டால் மறுபடியும் மறுபடியும் மாற்றிக்கிட்டே இருக்க முடியாது. காதல் சிலருக்கு செடி மாதிரி, ஒன்று போச்சுன்னு இன்னொன்னு. ஆனால், சிலருக்கு அந்த செடியில் இருக்கும் பூ மாதிரி. மறுபடியும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது. அது போலத்தான் எனது காதலும் என்று கூறி விஜய் சென்றுவிடுவார்.

நேருக்கு நேர்

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா ஆகியோர் பலர் நடித்த படம் நேருக்கு நேர். 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் வணிக ரீதியாக ஹிட் கொடுத்த படமாக அறிவிக்கப்பட்டது.

காதலுக்கு மரியாதை

மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்த காதல் படம் காதலுக்கு மரியாதை. 1997ல் வெளியான இப்படம் அப்போதே ரூ.38 கோடி வரையில் வசூல் குவித்ததாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பாசிலின் மலையாள படமான அனியதிபிரவு என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இப்படம் நடிகர் அப்பாஸ்க்கு சென்றுள்ளது. ஆனால், அவருடைய் கால்சீட் பிரச்சனை காரணமாக விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும்

அறிமுக இயக்குனர் எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் முன்னணி ரோலில் நடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும். முதலில் இப்படத்திற்கு ருக்மணிக்காக என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்பி சௌதரி பார்த்தால் பசி தீரும் என்ற மாற்ற சொல்லியிருக்கிறார். ஆனால், இறுதியில் துள்ளாத மனமும் துள்ளும் என்று டைட்டில் வைக்கப்பட்டு ஹிட் கொடுத்துள்ளது.

இப்படம் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் நடிப்பில் வந்த சிட்டி லைட்ஸ் படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷி

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம். விஜய், ஜோதிகா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். முதலில் இந்த ரோலுக்கு சிம்ரன் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜோதிகாவிற்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களுக்கு போட்டியாக வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் ரிலீஸ் தேதியிலிந்து தள்ளி வைக்கப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஜோதிகாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலை

இயக்குனர் ரமணா இப்படத்தை இயக்கினார். இதில், குஷி வெற்றிக்கூட்டணி விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். 150 வரை ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

திருப்பாச்சி

ஊர் பேர்களை படத்திற்கு டைட்டிலாக வைப்பதில் வித்தைக்காரரான இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்த ஆக்‌ஷன் படம் திருப்பாச்சி. 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் இப்படமும் ஒன்று. இப்படம் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வேலாயுதம்

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனீலியா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2011ல் வெளியான படம் வேலாயுதம், 2000ல் வெளியான தெலுங்கு படமான ஆசாத் படத்தின் தூண்டுதலில் இப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.85 கோடி வரையில் வசூல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் 6 விஜய் விருதுகளை கைப்பற்றியது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த படங்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதும் இப்படம் ரூ.1.25 பில்லியன் வரை வசூல் குவித்துள்ளது.

கத்தி

துப்பாக்கியைத் தொடர்ந்து முருகதாஸ் கத்தி படத்தை இயக்கினார். விஜய் மற்றும் சமந்தா கூட்டணியில் வந்த இப்படம் ரூ.130 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்துள்ளது. விவசாயிகளின் பிரச்சனையை மையப்படுத்தி இப்படம் வெளிவந்திருந்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடி படங்களில் இதுவும் ஒன்று.

மீஞ்சூர் கோபி நயினார் என்பவர் இயக்குனர் முருகதாஸ்க்கு எதிராக காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். மூத குடி என்ற தனது நாவலின் தழுவல் தான் இப்படம் என்று கூறி அவர் தொடர்ந்த வழக்கு முருகதாஸ்க்கு சாதகமாக வந்தது.

தெறி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா கூட்டணியில் வந்த படம் தெறி. இப்படம் ரூ.1 பில்லியன் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் கொடுத்தது. ஹிந்தியில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சர்கார்

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த 3ஆவது முக்கிய படம் சர்கார். அரசியல் கதையை மையப்படுத்திய இப்படம் ரூ.260 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் கொடுத்துள்ளது.

திருட்டுக்கதை

சர்கார் படத்தின் எழுத்தாளர் வருண் ராஜேந்திரனுடையது. கடந்த 2007ல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் தனது செங்கோல் கதையை பதிவு செய்து வைத்திருந்தார். இதன் காரணமாக இப்படத்தின் கதை விவகாரம் தொடர்பாக வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தார்.

இதன் விசாரணையில், தயாரிப்பாளர் சன் பிக்சர் நிறுவனம், முருகதாஸ் மற்றும் வருண் ராஜேந்திரன் ஆகியோருக்கு இடையில் சமரச உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சர்கார் பட டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவும், அவருக்கு ரூ.30 லட்சம் கொடுக்கவும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த பாக்யராஜ் செங்கோல் கதை மற்றும் சர்கார் கதை இரண்டும் வெவ்வேறு என்று கூறவே இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

49பி

சர்கார் படத்தின் மூலம் 49பி குறித்து வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது, ஒருவரது வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டிருந்தால் தேர்தல் அலுவலரிடம் 49பி-ன் கீழ் வாக்களிக்க விரும்புவதாக தெரிவிக்கலாம்.

அந்த வாக்காளருக்கு தனியாக ஒரு சீட்டு வழங்கப்படும், அந்தச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். அதில் இருந்து தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு அவர் வாக்களிக்கலாம். ஆனால், இந்த வாக்குச்சீட்டு தனியே வைக்கப்படும். கள்ள ஓட்டு தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று பலரும் 49பி-ன் கீழ் வாக்களித்தால் தேர்தலுக்கு பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில், மெர்சல், கில்லி, ஃப்ரண்ட்ஸ், போக்கிரி, நண்பன், காவலன், சச்சின், ஷாஜகான், ப்ரியமானவளே, மாண்புமிகு மாணவன், பத்ரி, சிவகாசி, தலைவா ஆகிய படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive