பெண் என்பவள் யார்..? இன்று வரை ஆச்சிரியத்தின் குறியீடு!!

இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சப...

இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.

இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும்.

இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையை போற்றுவோம்.

பெண் என்பவள் வியப்புக்குரியவள். இறைவன் படைப்பிலே மனஉறுதி கொண்ட உயர்வான சிற்பம். விண்ணுலகின் கவிதை மலர்கள் விண்மீன்கள் என்றால், மண்ணுலகின் கவிதை மலர்கள் பெண்கள். பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே இம்மண்ணுலகம் அறிவு பெறுகிறது.

ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான படைப்பாகவும் தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதி அற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகிறாள் என்று ஹெர்மிஸ் என்ற உலக அறிஞன் ஒத்துக் கொள்கிறான்.

மனிதகுலத்தின் வாழ்விற்கும் அந்த வாழ்வை தகுதி உள்ளதாக மாற்றி காட்டியதற்கும், படைத்த இறைவனுக்கே நிகர் இவள். பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட.

பெண்கள் சிரித்தால் செண்பகமரம் பூக்கும். அவள் காலடி பட்டால் அசோகமரம் பூக்கும். பேசினால் பூக்கும் நமேரு மரங்கள், பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரங்கள், அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால் பூக்கும் திலக மரங்கள் என்று பறைசாற்றுகிறது பழமையான சமஸ்கிருத பாடல்.

வாய்பேசத் தெரியாத விருட்சங்கள் கூட பெண்ணின் அன்பையும், அரவணைப்பையும் உள் வாங்குகிறது என்று சொன்னால் மீதமுள்ள உயிர்கள் இப்பெருமைகளை எண்ணிப் பார்ப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

அதனால்தான் பெண்ணின் கருணை, அடியாள் போல் செய்யும் தொண்டு, பூமாதேவி போல் காட்டும் பொறுமை, குடும்ப நிர்வாகத்தில் செயல்படும் மந்திரி, என்று நீதி வெண்பா “அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப் பொன்னின் அழகும் புவிப் பொறையும் வன்னமுலை வேசி துயிலும், விறல் மந்திரி மதியும் பேசில் இவையுடையாள் பெண்”, என்றது.

இத்தனைச் சிறப்புகளையும் அசை போடுவதற்கு காரணம் உலக மகளிர்தின கொண்டாட்டம்.

1789 ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடந்த போது சமத்துவம், வாக்குரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வேண்டி பெண்கள் போராட்ட களத்தில் இறங்கினர்.

அதன் விளைவு மன்னர் லூயிஸ் பிலிப் தன் பதவியைத் துறந்தான். ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவிலும் போராட்டம் பரவியது.

இதையடுத்து பிரான்சின் 2-ம் குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் 1848 மார்ச் 8-ல் பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.

1910-ம் ஆண்டு ஓப்பன் ஹேகலில் வீரப் பெண்மணி கிளாராஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடந்தது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸண்டிரா ஹெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ம் திகதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் காட்டுகிறது.

ஒரு காலத்தில் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கப் போராடினார்கள்.

ஆனால் இன்று சமுத்துவம், சுதந்திரம், உரிமைகளைப் பெற்று சாதனைப் படைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தினார்களே, அதேபோல இன்று ஆண்களை அடிமைப்படுத்த பெண்கள் ஒருசிலர் நினைப்பது துரதிஷ்டம்.

நிகர், இளைப்பில்லை என்று பாடியதன் ஆழத்தை செவி மடுத்து நமக்கு பெறப்பட்ட உரிமைகளை சரியாகப் பயன்படுத்துவது சாலச்சிறந்தது. அதை விடுத்து ஒரு காலத்தில் ஆண்கள் இப்பெண் சமூகத்திற்கு இளைத்த அதே கொடுமைகளை நாம் ஏவுகணைகளாக பிரயோகம் செய்தால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

நமக்காக போராடி நம் உரிமைக்காக குரல் கொடுத்த நம் முன்னோடிகளின் கனவை நனவாக்க முயல்வோம். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் என்பதை உலகறியச் செய்வோம்.

அந்த ஞானத்திற்கு உதாரணமாக விளங்கிய பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி, முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி, ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி கொண்ட முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியார், சாதிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிய குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாவித்திரிபாய் போன்றோரை, மேலும் பல சாதனைகளைப் படைத்த பெண்களைப் பின்பற்றி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமூகத்தை உருவாக்க முயல்வோம்.

தண்ணீரைக் கண்டால் பயிர்கள் எப்படி பசுமையாக நிமிர்ந்து நிற்குமோ, அதைப்போல பெண்கள் தங்கள் குணங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும், நல்லொழுக்கத்தை படைக்க முடியும் என்பதையும், உலகிற்கு உணர்த்த வேண்டும்.

விஞ்ஞான உலகை அசைத்து பார்க்கக் கூடிய வீரமங்கையாக, இல்லறத்திலும், சமூகத்திலும், நாடு போற்றக்கூடிய வகையில் திட்டங்களை வகுத்து திறமையாக செயல்படும் மந்திரியாக அதற்கேற்றாற்போல் மதிநுட்பத்தை மகுடமாக சூடியவளாக பெண் வலம் வந்தால் இவ்வுலகம் உள்ளளவும் வாழும்.

பெண் என்பவள் மகளாக, மனைவியாக, தாயாக, தன்னலம் கருதா தொண்டுள்ளம் கொண்ட சேவகியாக, உதவுவதன் மூலம் உயிர்களை வாழ்விக்க முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் ஜீவனாகிய, பெண்ணின் சிறப்புகளை, உயர்வினை போற்றுவோம்..வாழ்த்துவோம்.

மேலும் பல...

1 comments

  1. நல்ல தகவல் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete

Blog Archive